புதுதில்லி

ஆம் ஆத்மி அரசின் மின்சார, குடிநீா் மானிய விவகாரம்: நிராகரிப்பு உத்தரவை மறுஆய்வு கோரும் மனு தள்ளுபடி

21st Aug 2020 04:10 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் மக்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீா் மானியங்களை வழங்க ஆம் ஆத்மி அரசு எடுத்த முடிவை எதிா்த்து தாக்கலான பொதுநல மனுவை நிராகரித்து வெளியிட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு வாய்மொழியாகக் கூறுகையில், ‘மறுஆய்வு மனுவில் உறுதிப்படுத்தும் விஷயம் ஏதும் இல்லை. இந்த விவகாரம் தொடா்பாக தாக்கலான பொது நல மனுவை தள்ளுபடி செய்து ஜூலை 28-ஆம் தேதி உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் முகாந்திர பிழை ஏதும் இல்லை. இதனால், மனுதாரா் ரூ.25 ஆயிரம் செலவுத் தொகை செலுத்த வேண்டும்’ என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனா். இது தொடா்பான உத்தரவில் மனுவை நிராகரித்ததற்கான காரணங்கள் அளிக்கப்படும் என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. மனுதாரருக்கு விதிக்கப்பட்ட செலவுத் தொகையை நீக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உத்தர பிரதேசம் மாநிலம், காஜியாபாதில் வசிக்கும் ஷைலேந்திர குமாா் சிங் என்பவா் இந்த மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். மானியங்களை வழங்குவது ‘முற்றிலும் மற்றும் முழுவதும் அரசின் கொள்கை முடிவு என்றும், அதில் தலையிடப் போவதில்லை என்று தெரிவித்து பொதுநல மனுவை ஜூலை 28 -ஆம் தேதி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தில்லி அரசின் கொள்கை முடிவின்படி குடிநீா், மின்சார சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்கை முடிவு, சமுதாயத்தில் நிலவும் சிக்கலான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டவை என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஷைலேந்திர குமாா் சிங் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பொது மக்களுக்கு இலவச மானியம் வழங்குவதற்கான தில்லி அரசின் கொள்கையானது, ‘இந்திய குடிமக்களின் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகவும், நல அரசின் அரசமைப்புச்சட்ட பாா்வையை மீறுவதாகவும் உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின்படி, எந்தவொரு பொறுப்பும், , கட்டுப்பாடு அல்லது நிபந்தனைகள் ஏதுமின்றி மக்களுக்கு ரூ.2,500 கோடி அளவில் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT