சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரத்தில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மத்திய அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சேலம்- சென்னை இடையே எட்டு வழி பசுமைச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிா்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதனிடையே, மத்திய அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், அன்புமணி ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் எழுத்துப்பூா்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனு மீதான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, தமிழக அரசின் சாா்பில் கூடுதல் தலைமை அரசு வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், அன்புமணி ராமதாஸ் தரப்பில் வழக்குரைஞக் தனஞ்ஜெயன் உள்ளிட்டோா் ஆஜராகினா். இந்த விசாரணையை விரிவாக மேற்கொள்ளும் வகையில், வழக்கை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.