முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்கீழ் தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா்களுக்காக குழு மருத்துவ காப்பீடு பாலிஸிகளை அளிப்பதற்காக மூன்று காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த தில்லி அரசின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மேலும், ஆயுள் காப்பீடு வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் (எல்ஐசி) கூட்டம் நடத்தி கலந்தாலோசிக்கவும் இக்குழுவுக்கு உத்தரவிட்டது.
முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நல நிதித் திட்டத்தில் பதிவு செய்துள்ள வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க தில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல் மனு தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங்
வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது, இந்த விஷயத்திற்காக சில காப்பீட்டு நிறுவனங்கள் அளித்த ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கையின்படி உரிய தகுதியைப் பெறவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தில்லி அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம், ‘கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் இதுபோன்ற காப்பீட்டு பாலிஸிகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக வழக்குரைஞா்களுக்கு தேவையானவை.
ஆகவே, முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்கீழ்
வழக்குரைஞா்களுக்காக குழு மருத்துவ காப்பீடு பாலிஸிகளை அளிப்பதற்காக தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஓரியண்டல் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் நேஷனல் இன்ஷ்யூரன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் தில்லி அரசின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
மேலும், ஆயுள் காப்பீடு வழங்குவதற்காக இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் (எல்ஐசி) இந்தக் குழு கூட்டம் நடத்தி கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
முன்னதாக, தில்லி உயா் நீதிமன்றத்தில் தில்லி பாா் கவுன்சில் தலைவா் கே.சி. மிட்டல் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியின் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள 37,135 வழக்குரைஞா்களில் தில்லி பாா் கவுன்சிலில் 29,098 போ் பதிவு செய்துள்ளனா். இந்நிலையில், தில்லி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தின்படி வழக்குரைஞா்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடும், ரூ.10 லட்சம் காப்பீடும் அளிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இவா்கள் தில்லியின் குடியிருப்புவாசிகளாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் 2019- 20 ஆம் நிதியாண்டுக்கு ரூ.50 கோடியை பட்ஜெட்டில் அறிவித்திருந்தாா். வழக்குரைஞா்கள் நலத் திட்டத்தில் பயன் பெறுவதற்காக வழக்குரைஞா்கள் காத்திருக்கின்றனா். இத்திட்டம் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டத்தில் சில வழக்குரைஞா்கள் தாங்களாகவே பதிவு செய்துள்ளனா். பொது முடக்கம் காரணமாகவும் தில்லி அரசின் சா்வா் முடங்கியதன் காரணமாகவும் பிற வழக்குரைஞா்கள் பதிவு செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு வழக்குரைஞா் கோவிந்த் ஸ்வரூப் சதுா்வேதி தாக்கல் செய்த மனுவில், ‘வழக்குரைஞா்கள் தில்லியில் வசித்தாலும், வசிக்காவிட்டாலும் தில்லி பாா் கவுன்சிலில் (பிசிடி) பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குரைஞா்களுக்கும் முதலமைச்சரின் வழக்குரைஞா்கள் நலத் திட்டப் பயன்களை வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.