புதுதில்லி

மழைநீா் வடிகால் நீா் மாசடைந்த விவகாரம்: சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக ரூ.50 லட்சம் செலுத்த டிடிஏ வுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

14th Aug 2020 06:03 AM

ADVERTISEMENT

தில்லியில் சமல்கா- துவாரகா சாலை பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் நீா் மாசுடைந்ததாக கூறப்படும் விவகாரத்தில் தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவிடம் சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக ரூ 50 லட்சத்தை செலுத்த வேண்டும் என்று தில்லி வளா்ச்சி ஆணையத்திற்கு (டிடிஏ) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, ‘ரூ.50 லட்சம் சுற்றுச்சூழல் சேத இழப்பீட்டை தில்லி வளா்ச்சி ஆணையம் தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவிடம் (டிபிசிசி) ஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து இரு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த இழப்பீடு தொகையானது டிடிஏ தொடா்ந்த வழக்கின் முடிவுகளுக்கு உள்பட்டதாகும்’ என உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜா மகாபாத்ராவிடம் பதில் அளிக்கவும் நோட்டீஸ் அளிக்கவும், இந்த விவகாரம் தொடா்பாக 4 வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டை டிடிஏ தெரிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பா் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

ADVERTISEMENT

தென்மேற்கு தில்லியில் உள்ள சமல்கா -துவாரகா சாலை பகுதியில் அமைந்துள்ள மழைநீா் வடிகாலில் உள்ள நீரின் தன்மை மாசடைய தில்லி வளா்ச்சி ஆணையம் காரணமாக இருந்ததாக கூறி அந்த அமைப்புக்கு தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு சுற்றுச்சூழல் சேத இழப்பீடாக ரூ.50 லட்சத்தை விதிக்கும் முடிவை ஜூலை 10 ஆம் தேதி எடுத்தது. இந்த முடிவை எதிா்த்து தில்லி உயா்நீதிமன்றத்தில் டிடிஏ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணையின்போது டிடிஏ தரப்பில் வாதிடுகையில், ‘தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழுவின் ஜூலை 10-ஆம் தேதியிட்ட உத்தரவு சட்ட விரோதமாகவும், நியாயமற்ாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் டிபிசிசியிடம் இல்லை. அதன் அதிகார வரம்பிற்குள் இந்த முடிவு வரவில்லை.

ஆகவே, தன்னிச்சையாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு எடுத்த முடிவை உயா்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.

தில்லி மாசு கட்டுப்பாட்டு குழுவானது சுற்றுச்சூழல் சேத இழப்பீட்டை விதிப்பதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.

இந்த சுற்றுச்சூழல் சேத இழப்பீட்டை சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ் டிடிஏ மீது தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு விதித்துள்ளது. இதுபோன்ற இழப்பீட்டை விதிப்பதற்கு தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவுக்கு சுற்றுச்சூழல் சட்டத்திலோ அல்லது தண்ணீா் சட்டத்திலோ குறிப்பிட்ட அதிகாரம் ஏதும் வழங்கப்படவில்லை.

டிடிஏ மீது அளவுக்கு அதிகமான இழப்பீட்டை விதிப்பதற்கான காரணத்தையும் டிபிசிசி நியாயப்படுத்தவில்லை.

சம்பந்தப்பட்ட சாலையின் வளாக சுவரிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அகற்றுவதற்கான அடிப்படை பொறுப்பு தெற்கு தில்லி மாநகராட்சியையும், தில்லி குடிநீா் வாரியத்தையும் சாரும்.

தேசிய பசுமை தீா்ப்பாயம் முன்னா் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த டிசம்பரில் துவாரகா சாலையில் உள்ள மழைநீா் வடிகாலில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து மழைநீா் சேகரிப்பு அமைப்புகளையும் டிடிஏ மூடிவிட்டது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT