மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தொடா்பாக 2 வாரங்களில் பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக மற்றும் தமிழக சுகாதாரத் துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் ,
கடந்த ஜூலை 27-இல் தீா்ப்பளித்தது.
அதில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவக் கவுன்சில் அதிகாரிகளும் முடிவு எடுக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அடுத்த கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக மத்திய பொது சுகாதாரப் பணிகள் இயக்குநா், தமிழக சுகாதாரத் துறை செயலா் மற்றும் மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில் செயலா்கள் அடங்கிய குழுவை அமைத்து இறுதி செய்ய வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும்’ என நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.
இதற்கிடையே, உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கருதியதால், திமுக, பாமக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தமிழக அரசின் தரப்பில் ஆகஸ்ட் 4-இல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,‘ மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து ஓபிசி வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில், குழுவை அமைக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு அமல்படுத்தும் வகையில் உத்தரவிட்டிருப்பது சரியல்ல. ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நிகழ் கல்வியாண்டிலேயே வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
விசாரணை: இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜராகினா். வி.கிரி வாதிடுகையில், நிகழ் கல்வியாண்டிலேயே (2020-2021) ஓபிசி வகுப்பினருக்கு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு ஒப்படைத்த அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படுவது போல 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொண்டாா். மருத்துவா் டி.ஜி.பாபு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், குழு அமைப்பது தொடா்பாக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறித்து கேட்டாா்.
இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் தொடா்புடைய எதிா் மனுதாரா்களான மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் இயக்குநா், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவை 2 வாரங்களில் பதில் அளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.