தெற்கு தில்லியில் வாடகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் எய்ம்ஸ் மருத்துவரின் சடலம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மீட்கப்பட்டது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தெற்கு தில்லி காவல் துணை ஆணையா் அதுல் குமாா் தாக்குா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: தெற்கு தில்லி, ஹோஸ் காஸ் பகுதியில் உள்ள கெளதம் நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் அந்த வீட்டுக்குச் சென்றனா். அங்கு வீட்டினுள் தூக்கிய தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கிடந்தது. அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவா் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டிருந்த மருத்துவா் மோஹித் சிங்லா (40) என்பது விசாரணையில் தெரிய வந்தது.
ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா பகுதியைச் சோ்ந்த அவா், 2006-ஆம் ஆண்டில் இருந்து தில்லியில் தனியாக வசித்து வந்துள்ளாா். அவரது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் அதிகாரி தாக்குா் கூறினாா்.