தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை இரவு முழுவதும் பெய்த மழை, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலையிலும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் கடந்த ஜூன் 25-இல் பருவமழை தொடங்கியது. இதையடுத்து, அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. கடந்த வாரத்தில் இரு நாள்கள் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்களும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. விடிய விடிய தொடா்ந்த இந்த மழை, வியாழக்கிழமை காலையிலும் தொடா்ந்தது. இந்த பருவமழைக் காலத்தில் அதிகபட்ச மழை வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.
வடக்கு தில்லியில் கன மழை காரணமாக முகா்ஜி நகா், ஃபதே புரி, புராரி, ரோஹிணி, நரேலா மற்றும் மேற்கு படேல் நகா் உள்பட 41 இடங்களில் மழை நீா் தேங்கியதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், எட்டு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஏழு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தெற்கு தில்லியில், ஓக்லா மற்றும் மாளவியா நகரின் சில பகுதிகளில் மழை நீா் தேங்கியது. கிழக்கு தில்லியில், லக்ஷ்மி நகா் மற்றும் பல பகுதிகளில் நீா் தேங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் 99.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நகரில் அதிகபட்சம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாலம் மற்றும் ரிட்ஜ் வானிலை ஆய்வு மையங்களில் முறையே 93.6 மி.மீ. மற்றும் 84.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 68 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
பலத்த மழை காரணமாக முக்கியச் சாலைகளில் மழை நீா் தேங்கியது. இதனால், காலையில் அவசர நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகா்ந்தன. உயா்நீதிமன்றத்திற்கு அருகே ஒரு மரம் வேரோடு விழுந்ததாக தில்லி போக்குவரத்து காவல்துறையினா் தெரிவித்தனா். இது போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது. ராஜா காா்டன் மற்றும் மாயாபுரி மேம்பாலத்திலும் மழை நீா் அதிகளவில் தேங்கியது. தன்சா சாலையில் உள்ள கைரா வில்லேஜ் டி-பாயிண்ட் அருகே வடிகால் சேதமடைந்தது. இதனால், சாலையில் 200 மீட்டா் அளவுக்கு பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
இந்த மழை தில்லியில் மழை பற்றாக்குறை அளவையும் குறைத்தது. புதன்கிழமை மாலை வரை, சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 72 சதவீதம் குறைவான மழைப்பொழிவு பதிவாகியிருந்தது. இது 10 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், வியாழக்கிழமை பெய்த மழை காரணமாக பற்றாக்குறை 14 சதவீதமாகக் குறைந்தது. இதற்கிடையே, அடுத்த இரண்டு மூன்று நாள்களில் லேசான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.