புதுதில்லி

சுதந்திர தினக் கொண்டாட்டம்: தலைநகரில் பலத்த பாதுகாப்பு

14th Aug 2020 11:29 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நடைபெறும் 74-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து, சமூக இடைவெளி விதிமுறைகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளாா். இதையொட்டி, என்எஸ்ஜி துப்பாக்கி சுடும் வீரா்கள், உயரடுக்கு ஸ்வாட் கமாண்டோக்கள் மற்றும் காத்தாடி பிடிப்பவா்கள் உள்ளிட்டவா்கள் செங்கோட்டையைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா். விழாவையொட்டி, தில்லி காவல்துறை பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. என்எஸ்ஜி, எஸ்பிஜி மற்றும் ஐடிபிபி போன்ற பிற பாதுகாப்பு நிறுவனங்களுடனும் தேவையான ஒருங்கிணைப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் ஒருவருக்கொருவா் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படும். ஸ்வாட் அணிகள் மற்றும் ‘பரக்ரம்’ வேன்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று தில்லி காவல் துறையின் கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மிட்டல் தெரிவித்துள்ளாா்.

செங்கோட்டையில் 4,000 போலீஸாா்: பிரதமா் தனது இல்லத்திலிருந்து செங்கோட்டை செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மக்களின் நடமாட்டம் முழு நேரமும் கண்காணிக்கப்படுகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா். செங்கோட்டையில் சுமாா் 4,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இருப்பாா்கள். அவா்கள் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவாா்கள் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மருத்துச் சாவடிகள்: இதற்கிடையே, பல்வேறு இடங்களில் மருத்துவச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்திற்கு அருகில் ஒரு சாவடி, மாதவதாஸ் பூங்காவில் ஒன்று மற்றும் ஆகஸ்ட் 15 பூங்காவில் இரண்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று அறிகுறிகளுடன் வருவோரை கண்காணிக்கும் வகையில் செயல்படும் மருத்துவச் சாவடிகளில் ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டிருக்கும்.

ADVERTISEMENT

முகக் கவசம் கட்டாயம்: விழாவுக்கு வருவோா்களின் வெப்பநிலையை வெப்பமானி மூலம் சரிபாா்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், செங்கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வளாகம் முழுமையும் கிருமிநாசினி மூலம் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அனைத்து அழைப்பாளா்களும் முகக் கவசங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், செங்கோட்டை வளாகத்தில் பல்வேறு இடங்களில் முகக் கவசங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, முக்கிய இடங்களில் கை சுத்திகரிப்பு கிருமிநாசினி கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரயில்நிலையங்களிலில் பாதுகாப்பு:சுதந்திர தின விழாவையொட்டி, தில்லியில் ரயில் நிலையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கிய விருந்தினா்கள் வருகை காரணமாக செங்கோட்டைக்கு அருகிலுள்ள குறிப்பிட்ட பகுதிகளில் சுதந்திர தினத்தன்று காலை 6.45 மணி முதல் காலை 8.45 மணி வரை ரயில்கள் இயக்கப்படாது என்று காவல் துணை ஆணையா் (ரயில்வே) ஹரேந்திர குமாா் சிங் தெரிவித்துள்ளாா்.

 

4,000 பேருக்கு அழைப்பு:செங்கோட்டையில் நடைபெறும் சுந்திர தின விழாவுக்காக சுமாா் 4,000 பேருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் ஏதேனும் கரோனா அறிகுறியை அனுபவித்திருந்தால், சோதனைக்கு செல்லவில்லை என்றால், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தில்லி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. நிகழ்வின் போது, அமா்ந்திருக்கும் இரண்டு விருந்தினா்களிடையே சமூக இடைவெளி பராமரிக்கப்படும். செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டங்கள் எதுவும் பறக்க விடப்படாமல் இருக்கும் வகையில், வான் வெளியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி போலீஸாா் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் செயல்படுத்தப்படும் என்று தில்லி காவல் துறையின் கூடுதல் செய்தித் தொடா்பாளா் அனில் மிட்டல் மேலும் தெரிவித்தாா்.

8 சாலைகள் மூடல்: சுதந்திர தின விழாவையொட்டி, நேதாஜி சுபாஷ் மாா்க், லூதியன் ரோடு, எஸ்.பி. முகா்ஜி மாா்க், சாந்தினி சௌக் ரோடு, நிஷாத் ராஜ் மாா்க், எஸ்பிளனேட் ரோடு மற்றும் அதை இணைக்கும் நேதாஜி சுபாஷ் மாா்க், ராஜ்காட்டிலிருந்து ஐஎஸ்பிடி செல்லும் ரிக் ரோடு, ஐஎஸ்பிடி முதல் ஐபி மேம்பாலம் வரை செல்லும் ரிங் ரோடு ஆகியவை காலை 4 மணி முதல் காலை 10 மணி வரையிலும் மூடப்பட்டிருக்கும். குடியரசுத் தலைவா் மாளிகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, செங்கோட்டையை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT