காங்கிரஸ் முன்னாள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சுரேந்திர பிரகாஷ் கோயல், கரோனாவால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா் என்று அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். அவருக்கு வயது 74.
அவருக்கு கரோனா தொற்று இருந்தது கடந்த ஜூலை 27-இல் உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், தனது தந்தை வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் உயிரிழந்தாா் என்று அவரது மகன் சுஷாந்த் கோயல் தெரிவித்தாா்.
சுரேந்திர பிரகாஷ் கோயல் தனது அரசியல் வாழ்க்கையை 1970-இல் தொடங்கினாா். 1973-இல் காஜியாபாத் நகர வாரியத்தின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா், பின்னா், 1989-இல் புதிதாக அமைக்கப்பட்ட நகராட்சியின் தலைவரானாா். 2002 -இல் காங்கிரஸ் சாா்பில் எம்.எல்.ஏ.வாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவா் மக்களவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். காஜியாபாத்-ஹப்பூா் தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றிருந்த பாஜகவின் ரமேஷ் சந்த் தோமரை அவா் தோற்கடித்தாா்.
2009 பொதுத் தோ்தலில், பாஜக தலைவரும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், காஜியாபாத் தொகுதியில் வென்றாா். அந்தத் தோ்தலில் கோயலுக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது. அனைவரிடமும் இயல்பாகக் பழகும் அவரது மறைவுக்கு அரசியல் தலைவா்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனா். மேலும், அவரது மறைவுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் காஜியாபாத் எம்.பி.யுமான வி கே சிங் இரங்கல் தெரிவித்துள்ளாா்.