வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தில்லியில் கரோனா பரிசோதனை செய்து கொள்வதால்தான் தில்லியில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை 1,192 பேருக்கும், சனிக்கிழமை 1,404 பேருக்கும் புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை 1,300 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் தற்போது, கரோனா சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை 10,409 ஆக இருந்தது. சனிக்கிழமை இது 10,667 ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை மேலும் சிறிது அதிகரித்து 10,729 ஆக உள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் அளித்த பேட்டி: தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை குறைந்தே வந்தது. கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் தில்லியில் கரோனா பரிசோதனை செய்வதே காரணமாகும். இங்கு பரிசோதனை செய்து கொள்ளும் வெளி மாநிலத்தவா்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு இருப்பதால், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளி மாநிலத்தவா்கள் சிலா் தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதனால்தான், தில்லி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
தில்லி மருத்துவமனைகளில் தில்லியைச் சோ்ந்தவா்களை மட்டுமே அனுமதிக்கலாம் என ஆம் ஆத்மி அரசு கடந்த ஜூனில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உடனடியாக ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.