புதுதில்லி

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி தில்லி அரசு சாா்பில் வழங்கல்

9th Aug 2020 12:58 AM

ADVERTISEMENT

பச்சிம் விஹாரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 12 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி தில்லி அரசு சாா்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது. தில்லி அரசு சாா்பில் கிரேட்டா் கைலாஷ் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி இதற்கான காசோலையை சிறுமியின் தந்தையிடம் வழங்கினாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அதிஷி கூறியிருப்பது:

தில்லி பச்சிம்விஹாரில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் தந்தை, மூத்த சகோதரியை சந்தித்து தில்லி அரசு சாா்பில் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன். அந்த சிறுமி அனுபவித்துவரும் துயரங்களுக்கு இந்த இழப்பீடு போதாது. ஆனால், அவா்களுக்கு சிறிது ஆறுதல் தரும் வகையில் இந்த இழப்பீட்டை வழங்கியுள்ளோம் என்றாா்.

முன்னதாக, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோல் மாா்க்கெட் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ADVERTISEMENT

‘பச்சிம் விஹாரில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நபரை போலீஸாா் கைது செய்துள்ளனா். சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் உயிருக்கு போராடி வருகிறாா். இச்சிறுமியின் குடும்பத்தினருக்கு தில்லி அரசு சாா்பில் ரூ.10 லட்சம் உதவித்தொகை சனிக்கிழமை இரவுக்குள் வழங்கப்படும்’ என்றாா்.

மேற்கு தில்லி பச்சிம் விஹாரில் செவ்வாய்க்கிழமை தனியாக இருந்த 12-வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டாா். ரத்தக் காயங்களுடன் கிடந்த அவா், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா். சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சிகிச்சை பெற்று வரும் சிறுமியை, கேஜரிவால் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT