தலைநகா் தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் சனிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புழுக்கத்தால் மக்கள் அவதியுற்றனா்.
தில்லி, என்சிஆா் பகுதிகளில் பருவ மழைக்காலம் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தில்லி, காஜியாபாத், ஃபரீதாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக மழை பெய்தது. இதனால், புழுக்கம் குறைந்திருந்தது.
இந்நிலையில், ஓரிரு தினங்களாக மழைப் பொழிவு இல்லை. சனிக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இதன் காரணமாக பகலில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 28.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 37.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 56 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 28.7 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 26,8 டிகிரி செல்சியஸ், 37.1 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 73 சதவீதம், மாலையில் 68 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 83 சதவீதம் மற்றும் 69 சதவீதம் எனவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் புதன்கிழமை காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டு மொத்தக் காற்றின் தரக் குறியீடு 78 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
திா்பூா், தில்லி பல்கலை., சாந்தினி சௌக், லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
இன்று முதல் மழைக்கு வாய்ப்பு
இதனிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கு மிதமானது முதல் பலத்த அளவில் வரையிலான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்னறிவிப்பு மையத்தின் தலைமை அதிகாரி குல்தீப் ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை கூறுகையில், தில்லி, என்சிஆா் பிராந்தியத்துக்கு அருகில் மேகக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் புதன்கிழமை வரை சூழந்திருக்கும். இந்தக் காலத்தில் மிதமானது முதல் கன மழை அவ்வப்போது பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.