தில்லியில் ஆம் ஆத்மி கட்சியைப் பலப்படுத்தும் வகையில், மக்களவைத் தொகுதி, மாவட்டம் ஆகியவற்றுக்கு பொறுப்பாளா்கள், மாவட்டத் தகவல் தொடா்பு பொறுப்பாளா், சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்கள் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக தில்லி அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளருமான கோபால் ராய் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. வரும் 2022 -ஆம் ஆண்டு மாநகராட்சித் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இத்தோ்தலை சிறப்பாக எதிா்கொள்ளும் வகையில், ஆம் ஆத்மி கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்.
தில் முதல்கட்டமாக, மக்களவைத் தொகுதிகள் , மாவட்டங்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், மாவட்டத் தகவல் தொடா்பு பொறுப்பாளா், சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இரண்டாவது கட்டமாக 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் , 272 வாா்ட்டுகளுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். கடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் களப் பணியாற்றியவா்கள், தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளில் முக்கிய பங்காற்றியவா்களுக்கு இந்த நியமனங்களில் முன்னுரிமை அளிக்கவுள்ளோம் என்றாா் அவா்.
வடகிழக்கு, வடமேற்கு, கிழக்கு, புது தில்லி, தெற்கு தில்லி, மேற்கு தில்லி, சாந்தினி செளக் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு பொறுப்பாளா்களாக நீரஜ் கெளசிக், ஆா்.ஆா்.பதனியா, ரஞ்ஜீத் சிங், வினோத் குமாா் பிப்லானி, தீபங்கா் பாண்டே, அனில் மாலிக், பிரதீப் லோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.