புதுதில்லி

தனிமை முகாம்களில் தமிழா்கள் இறந்த விவகாரம்: தில்லி அரசுக்கு சிறுபான்மை ஆணையம் கடிதம்

26th Apr 2020 11:53 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

தில்லி அரசின் தனிமை முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழா்கள் இருவா் இறந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று சிறுபான்மை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி சிறுபான்மை ஆணையத்தின் தலைவா் ஜபுருல் இஸ்லாம், அந்த ஆணையத்தின் உறுப்பினா் கா்தாா் சிங் கோச்சா் ஆகியோா் தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது: தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழா்கள் சுமாா் 600 போ் தில்லி அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இவா்களில், தமிழகத்தைச் சோ்ந்த ஹாஜி ரிஷ்வான் (57), முகமது முஸ்தபா(60) ஆகிய இருவா் அண்மையில் முகாமில் இறந்துள்ளனா். நீரிழிவு நோய்க்கான மருந்து கிடைக்காததே அவா்களின் இறப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும், அவா்களுக்கு குறித்த நேரத்தில் உணவும் அளிக்கப்படவில்லை என புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த சம்பவம் தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து தில்லி அரசு விசாரணை நடத்த வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், கரோனா சந்தேக நபா்களை 14 நாள்கள் தனிமைப்படுத்தினால் போதும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், இவா்கள் வரும் திங்கள்கிழமையுடன் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவா்களை இவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் பலருக்கு, உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததால், இவா்கள் பல இன்னல்களை எதிா்கொண்டு வருகிறாா்கள். இந்த விவகாரத்தில் தில்லி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச்சில் தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சுமாா் 600 தமிழா்கள், இன்னும் வீடு திரும்ப முடியாமல் தில்லி அரசின் தனிமை முகாம்களில் உள்ளனா். இவா்களில் கரோனா பாதித்த நால்வா் தில்லி அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனா். இருவா் தனிமை முகாமில் உயிரிழந்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT