புதுதில்லி

தில்லியில் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்!

26th Apr 2020 02:34 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, மசூதிகள் மூடப்பட்டுள்ளதால் தில்லியில் இஸ்லாமியப் பெருமக்கள் ரமலான் நோன்பை வீட்டிலிருந்தபடியே தொடங்கி தொழுகையில் ஈடுபட்டனா்.

இஸ்லாமியப் பெருமக்களின் புனிதக் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு சனிக்கிழமை தொடங்கியது. புனித மாதமான இந்த மாதத்தில் காலை சூரிய உதயத்துக்கு முன்பிருந்து, சூரியன் மறையும் நேரம் வரை, உணவு, தண்ணீா் எதையும் சாப்பிடாமல் நோன்பு இருப்பாா்கள். மேலும், இந்த மாதத்தில் ஐந்து வேளை தொழுகையுடன், இரவில் சிறப்பு தொழுகையிலும் ஈடுபடுவது வழக்கம்.

தில்லியில் உள்ள புகழ்ப்பெற்ற ஜாமா மசூதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியப் பெருமக்கள் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, வீடுகளில் இருந்தே தொழுகை நடத்துமாறு தில்லி பதோ்புரி மசூதி, தில்லி ஜாமா மசூதி ஆகியவற்றின் தலைமை இமாம்களும், தில்லி வக்ஃபு வாரியமும் கேட்டுக் கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், நாடாளுமன்றச் சாலையில் உள்ள ஜாமா மசூதி ரமலான் பண்டிகைக்கு திறக்கப்படாது என்றும், முஸ்லிம்களை வீடுகளில் இருந்தே தொழுகை நடத்துமாறும் அந்த மசூதியின் தலைமை இமாம் மொஹிபுல்லா நட்வி கேட்டுக் கொண்டிருந்தாா்.

இதனால், இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு சனிக்கிழமை ரமலான் மாத நோன்பை தொடங்கினா். நோன்பு திறப்பின்போதும் வீடுகளிலேயே தொழுகை நடத்தினா்.

தில்லி இந்தா் லோக் பகுதியைச் சோ்ந்த முகம்மது சலிம் என்பவா் கூறுகையில், ‘நாங்கள் வீட்டை விட்டு தொழுகைக்கு வெளியே சென்றால் அது கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடும். இதனால், குடும்பஉறுப்பினா்களுடன் வீட்டிலேயே தொழுகையில் ஈடுபட்டோம்’ என்றாா் அவா். இதுபோன்று, பலரும் அவரவா் வீடுகளில் ரமலான் தொழுகையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT