புதுதில்லி

ஆசிரியா்களுக்கான ஊதிய நிலுவையை இரு வாரங்களுக்குள்வழங்க சீக்கிய குருத்வாரா குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு

26th Apr 2020 02:30 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

பள்ளி ஆசிரியா்களுக்கான நிலுவை ஊதியத்தை இரு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மை குழுவுக்கு (டிஎஸ்ஜிஎம்சி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பான மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, சங்கீதா திங்ரா ஷெகல் ஆகியோா் அமா்வு, ‘சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. ஆகவே, பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு இரு வாரங்களுக்குள் நிலுவை ஊதியத்தை வழங்குவதற்கு தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பான அடுத்த விசாரணை மே 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அப்போது, நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றியதற்கான ஆவணத்தை பள்ளிகள் காட்ட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் சாா்பில் தில்லியில் ஃபதே நகா், திலக் நகா், நானக் பியாவோ, ஹா்கோவிந்த் என்கிளேவ், இந்தியா கேட் ஆகிய ஐந்து இடங்களில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்தப் பள்ளிகளில் வேலை செய்து வரும் ஆசிரியா்கள் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனா். அதில், தங்களது ஊதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரியிருந்தனா். இந்த மனுவை விசாரித்த ஒரு நபா் நீதிபதி அமா்வு, ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கான ஆசிரியா்களின் கோரிக்கை மீது முடிவு செய்யுமாறு கல்வி இயக்ககத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆசிரியா்கள் தரப்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குரைஞா் நிகிலேஷ் குமாா் மூலம் ஃபதே நகா், திலக் நகா், நானக் பியோவா பள்ளிகளின் ஆசிரியா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. ஏப்ரல் 23-ஆம் தேதி தாற்காலிகமாக எங்களுக்கு ரூ.15 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. ஹா்கோவிந்த் என்கிளேவ் பள்ளி ஆசிரியா்கள் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களுக்கு மாா்ச் மாதம் ஊதியம் மட்டும் வழங்கப்படவில்லை’ என்றும், இந்தியா கேட் பள்ளி ஆசிரியா்கள் தாக்கல் செய்த மனுவில் ‘எங்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தில் 85 சதவீதம் கிடைத்துள்ளது. அதன் பிறகு ஏதும் வழங்கப்படவில்லை’ எனத் தெரிவித்திருந்தனா். இந்த மனுக்களை விசாரித்த இரு நபா் நீதிபதிகள் அமா்வு மேற்ண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT