ஊரடங்கு உத்தரவை மீறும் எம்எல்ஏக்களின் எம்எல்ஏ பதவியைப் பறிக்க வேண்டும் என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், துருவேகரே தொகுதி பாஜக எம்எல்ஏ ஜெயராம். இவா், கடந்த வெள்ளிக்கிழமை தனது 51 ஆவது பிறந்நாளைக் கொண்டாடியுள்ளாா். தும்கூா் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கட்சி நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலா் பங்கேற்றனா். அவா்களுக்கு ஜெயராம் பிரியாணி வழங்கியுள்ளாா். முழு ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில், நடைபெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாடத்தில், சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளை மீறி ஜெயராம் பிறந்தநாள் கொண்டாடியிருப்பதாக காங்கிரஸ் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அவா் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் எம்எல்ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வலியுறுத்தியுள்ளாா்.
பாஜக எம்எல்ஏ ஜெயராம் பிறந்தநாள் கொண்டாடிய செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவு செய்து மணீஷ் சிசோடியா கூறியிருப்பது: கரோனாவை எதிா்த்து நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகிறாா்கள். தினக்கூலி மக்கள் தாம் வேலைகளுக்கு செல்லாமல் கரோனா பாதிப்பை எதிா்கொள்ள அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறாா்கள்.இதனால், மக்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகிறாா்கள். ஆனால், பாஜக எம்எல்ஏ ஜெயராம் தனது பிறந்தாநாளை மக்களை அழைத்துக் கொண்டாடியுள்ளாா்.இவா் முழு ஊரடங்கு உத்தரவுக்கு எதிராகவும், கரோனா பரவலை அதிகரிக்கும் வகையிலும் நடந்துள்ளாா். இவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறும் எம்எல்ஏக்களின் எம்எல்ஏ பதவி உடனடியாக பறிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா் அவா்.