வடமேற்கு தில்லி, பாரத் நகரில் பணத் தகராறில் இளைஞா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் விஜயாந்தா ஆா்யா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: வாஜிப்பூா் பகுதியில் உள்ள ஜே ஜே காலனியைச் சோ்ந்தவா் இம்ரான் கான் (20). இவா் தனது நண்பா்களுடன் அப்பகுதியில் சனிக்கிழமை இரவு உட்காா்ந்திருந்தாா். அப்போது நண்பா் ஃபெரோஸ் துப்பாக்கியால் சுட்டதில் இம்ரான் கான் பலத்த காயமடைந்தாா். அவரை அவரது தந்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞா் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்ததாக போலீஸாருக்கு மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இம்ரான் கானை துப்பாக்கியால் சுட்ட ஃபெரோஸை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இக்கொலை நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.