போலி விசா மூலம் வெளிநாடு செல்லவிருந்த நபரையும், அவருக்கு போலி விசா ஆவணங்களை வழங்கிய முகவரையும் தில்லி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போலி விசா ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை யின் (சிஐஎஸ்எஃப்) அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் முனையப் பகுதியில் சம்பவத்தன்று காலை ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது, அவரை மற்றொரு நபரும் அங்கு சந்திப்பதற்காக வந்தார்.
இதையடுத்து, இருவரும் சிஐஎஸ்எஃப் போலீஸார் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்தனர். அவர்களில் ஒருவர் விமானப் பயணம் செய்வதற்காக ஆவணங்களை கவுன்ட்டரில் கொடுத்தபோது அவை போலியானவை என்று அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து, இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இருவரும் இந்தியாவைச் சேர்ந்த ராகுல் குமார் , ரவீந்தர் சிங் என்பதும், ராகுல் குமார் தில்லியிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு செல்ல இருந்ததும், ரவீந்தர் சிங் மும்பைக்கு விமானத்தில் செல்லவிருந்ததும் தெரியவந்தது.
விசாரணையில், ராகுல் குமாரிடம் ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு, அவருக்கு போலி ஆவணங்களை ரவீந்தர் சிங் ஏற்பாடு செய்தது தெரியவந்தது.
மேலும், தன் மீது விமான அதிகாரிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஏற்கனவே தோகாவிலிருந்து காத்மாண்டுக்கு ராகுல் குமார் விமானத்தில் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு, தில்லி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் அதிகாரி தெரிவித்தார்.