காஜியாபாதில் ஆட்டோவில் சவாரிக்கு வரும் பயணிகளிடம் கொள்ளையடித்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
சுமார் 13 வழக்குகளில் தொடர்புடையவர் ஆகாஷ். அவரைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு ரூ.25,000 வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது. சம்பவத்தன்று காஜியாபாத் பகுதியில் தனது கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த ஆகாஷை போலீஸார் வழிமறித்தனர். ஆனால், போலீஸாரை நோக்கி ஆகாஷ் துப்பாக்கியால் சுட்டு விட்டுத் தப்ப முயன்றார். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர்.
அப்போது, அவர்கள் போலீஸாரை நோக்கிச் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஆகாஷ் பலத்த காயமடைந்தார். அப்பகுதியில் இருள் சூழ்ந்திருந்ததால், அதை சாதகமாக்கிக் கொண்டு அவரது கூட்டாளி தப்பினார்.
ஆகாஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 13 வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தனது ஆட்டோவில் சவாரிக்கு வரும் பயணிகளை மிரட்டி கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது. மேலும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக தானும் தனதும் கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளையடித்து வந்ததாகவும் கூறினார். ஆகாஷிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.