புதுதில்லி

அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் விவகாரம்: மக்களை ஏமாற்றுகிறது தில்லி அரசு: ஹர்ஷ் வர்தன் குற்றச்சாட்டு

13th Sep 2019 06:59 AM

ADVERTISEMENT

தில்லியில் அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவதில் எதுவும் செய்யாமல் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு ஏழை மக்களை ஏமாற்றி வருகிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், சாந்தினி சௌக் தொகுதி பாஜக எம்பியுமான ஹர்ஷ் வர்தன் குற்றஞ்சாட்டினார்.
தில்லி பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி, தில்லி எம்.பி.க்கள் மீனாட்சி லேகி, ரமேஷ் பிதூரி, பர்வேஷ் வர்மா, கௌதம் கம்பீர், ஹன்ஸ் ராஜ்ஹன்ஸ், மாநிலங்களவை எம்பி  விஜய் கோயல்  ஆகியோர் செய்தியாளர்களை வியாழக்கிழமை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "அங்கீகாரமற்ற காலனிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் 2008ஆம் ஆண்டு சட்டத்தின்படி, தில்லி அரசு நான்கு விவகாரங்களைச் செய்ய வேண்டும். அங்கீகாரமற்ற காலனிகளின் வரையறை, பெயரிடுவதற்காக குழுக்கள் அமைப்பது, காலனிகளுக்கான பல்வேறு கட்டணங்களை நிர்ணயித்தல் போன்றவை குறித்து கடந்த 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு எதுவும் செய்ய வில்லை. அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்குமுறைப்படுத்துவதாக ஏழை மக்களை தில்லி அரசு ஏமாற்றி வருகிறது. இதேபோல் தான் முன்பு தில்லியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசும் செய்து வந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்தும் விவகாரத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கையில் எடுத்து பணிகளைத் தொடங்கி உள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசு, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 2021ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்த முடியாது என்று தனது இயலாமையைத் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு தில்லியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆம் ஆத்மி அரசு அளித்த 70 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை மக்களிடம் கொண்டு செல்வோம். ஆட்சிக்கு வந்தவுடன் ஓராண்டிலேயே அங்கீகாரமற்ற காலனிகள் பிரச்னையைத் தீர்த்து விடுவோம் என்று கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் கேஜரிவால் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இதுவரை செய்யவில்லை. தில்லி மக்களுக்கு தவறான தகவல் அளிக்கும் வகையில் ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. போலி வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஆம் ஆத்மி அரசு அமைந்தது. இதை வருகிற தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படுத்தி பாஜக வெற்றி பெறும் என்றார்.
தில்லியில் 1,797 அங்கீகாரமற்ற காலனிகளில் வசித்து வரும் லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காலனிகள் முறைப்படுத்துவதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அங்கீகாரமற்ற காலனிகளில் வசிப்பவர்களுக்கு உரிமையாளர் உரிமம் விரைவில் வழங்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்த தில்லி முதல்வர் கேஜரிவால், இதற்கான தில்லி அரசின் வரைவுக்கு மத்திய அரசு சாதகமான பதிலை அளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT