புதுதில்லி

ஐஎம்ஏ முறைகேடு வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

10th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தைச் சேர்ந்த ஐஎம்ஏ நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தை நடத்தி வந்த மன்சூர் கான் மற்றும் 24 நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை கூறுகையில், "பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை இன்னும் முடிவடையாததால் மேலும் துணைக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது' என்றார்.
பெங்களூரில் ஐஎம்ஏ நிதி நிறுவனத்தை நடத்தி வந்த மன்சூர் கான், முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று உறுதியளித்து, லட்சக்கணக்கானோரிடம் பணம் வசூலித்துள்ளார். 
அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தினர். மத போதகர்கள் மூலமாக பிரசாரம் செய்து, முஸ்லிம் சமூகத்தினரை தனது நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளார்.
இதனிடையே, மன்சூர் கான் துபை நாட்டுக்குத் தப்பிச் சென்றார். அப்போது, மத்திய, மாநில அரசுகள் ஊழலில் ஈடுபடுவதாகவும், இதனால் தாம் தற்கொலை செய்ய முடிவெடுத்து விட்டதாகவும் காணொலியை வெளியிட்டிருந்தார். 
அதைத் தொடர்ந்து, துபையில் இருந்து கடந்த ஜூலை 21-ஆம் தேதி இந்தியா திரும்பியபோது, அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். 
இந்த வழக்கை விசாரிக்குமாறு, சிபிஐயிடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT