புதுதில்லி

நாடாளுமன்ற வளாகத்தில் "ஃபிட் இந்தியா' இயக்கம் தொடக்கம்

7th Sep 2019 01:48 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற வளாகத்தில் "ஃபிட் இந்தியா' இயக்கத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார். 
 கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற தேசிய விளையாட்டுத் தின நிகழ்வின் போது, ஃபிட் இந்தியா இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்நிலையில், நாடாளுமன்றத்தில் ஃபிட் இந்தியா இயக்கம் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக உள்ள பகுதியில் இலகுவான உடற்பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய இளைஞர் விவகாரம், விளையாட்டு துறை (தனிப் பொறுப்பு) அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்பட பல்வேறு துறை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பேசியதாவது: இந்தியாவின் முயற்சியின் காரணமாக சர்வதேச யோகா தினம் தொடங்கப்பட்டதில் இருந்து யோகா என்பது உலகம் முழுவதும் மக்களின் அன்றாட பழக்கத்தில் ஒன்றாகிவிட்டது. ஆரோக்கிய இந்தியா என்பது மக்களின் இயக்கமாக உருவாக வேண்டும். இந்தியா மிகவும் ஒரு தகுதியான நாடு என்ற செய்தி வெளியே பரவ வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியை சிறந்த தகுதிக்குரிய தொகுதியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதை உறுதிப்படுத்தும் பொருட்டு உறுப்பினர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஊழியர்கள், உறுப்பினர்கள் வழக்கமான உடற்பயிற்சி, போதுமான ஓய்வு, சரிவிகித உணவு ஆகியவற்றுடன் கூடிய ஒரு ஆரோக்கிய வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது திறன் மற்றும் செயல்பாட்டை அதிகரிக்கும். ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் நாம் நமது கடைமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற முடியும் என்றார் அவர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT