புதுதில்லி

கன்னையாவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கு: அனுமதி அளிப்பதற்கான முடிவு எடுக்கப்படவில்லை: முதல்வர் கேஜரிவால்

7th Sep 2019 02:45 AM

ADVERTISEMENT

ஜவாஹர்வால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா மீதான தேசத் துரோக வழக்கில், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி அளிப்பது தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
எனினும், இந்த விவகாரம் குறித்த அனைத்து விதமான தகவல்களையும் தில்லி உள்துறை அமைச்சகம் சேகரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
2016, பிப்ரவரி 9ஆம் தேதி ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டதாக அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் உள்பட பலர் மீது தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
இந்த வழக்கை விசாரித்த தில்லி நீதிமன்றம் கன்னையா குமார் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு தில்லி அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தது. 
இதையடுத்து, தில்லி போலீஸார் தில்லி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு தில்லி அரசு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் தில்லி அரசு அனுமதி வழங்கிவிட்டதாக வெள்ளிக்கிழமை தகவல்கள் வெளியாகின. 
இதுகுறித்து முதல்வர் கேஜரிவால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், "ஜேஎன்யு தேச துரோக வழக்கு தொடர்பாக தில்லி அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தில்லி அரசின் உள்துறை அமைச்சகம் அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறது. உரிய முடிவு எடுத்தவுடன் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும். இந்த வழக்கில் எந்தவித அரசியல் குறுக்கீடோ, நிர்பந்தமோ கிடையாது' என்றார்.
பாஜக கண்டனம்: ஜேஎன்யு தேச துரோக வழக்கில் தில்லி அரசு அனுமதி அளிக்காததற்கு தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கண்டனம் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தேசத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்களுக்கு ஆதரவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசு செயல்படுகிறது. 
இது கண்டனத்துக்குரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி பாஜகவினர் போராட்டம் நடத்துவார்கள்' என்றார்.

காற்று மாசைக் கட்டுப்படுத்த மக்களிடம் யோசனை கேட்கும் தில்லி அரசு
குளிர்காலங்களில் தில்லியில் அதிகரிக்கும் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்கான மக்களின் யோசனைகளை  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஆண்டுதோறும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 20ஆம் தேதி வரை தில்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் அதிக அளவில் எரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தில்லியின் காற்று மாசு அபாயகரமான கட்டத்துக்கு செல்கிறது. இந்த 20 முதல் 25 நாள்களில் தில்லியில் குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்புக்காக காற்று மாசைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என தில்லிவாசிகள் யோசனை தெரிவிக்கலாம். 
இந்த யோசனைகளை செம்பம்பர் 12ஆம் தேதி வரை  c‌m4​c‌l‌e​a‌n​a‌i‌r@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற இணையதள முகவிரியில் பதிவிடலாம். கடந்த மூன்று ஆண்டுகளில் தில்லியில் ஒட்டுமொத்த காற்று மாசு சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு தில்லி அரசு, உச்சநீதிமன்றம், மத்திய அரசு, சுற்றுச்சூழல் மாசு தடுப்பு ஆணையம், மாநகராட்சிகள் ஆகியவை மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாகும்.
தில்லியில் 40 இடங்களில் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 4 ஆயிரம் புதிய பேருந்துகள் சேவையில் கொண்டுவரப்பட உள்ளன. இதனால் தில்லியின் காற்று மாசு மேலும் குறையும். தில்லியில் டீசல் ஜனரேட்டர்கள் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT