புதுதில்லி

ஆம் ஆத்மியில் இருந்து விலகினார் அல்கா லம்பா: காங்கிரஸில் இணைகிறார்

7th Sep 2019 02:45 AM

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக சாந்தினி சௌக் தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அல்கா லம்பா அறிவித்துள்ளார். அடிப்படை தொண்டர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக, தனது ராஜிநாமா அறிவிப்பை டுவிட்டரில் (சுட்டுரை) பதிவிட்டுள்ளார். அதில், ஆம் ஆத்மி கட்சி தற்போது "சிறப்பானவர்களின் கட்சி' யாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் விரைவில் அக்கட்சியில் இணைய உள்ளதாகவும் அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை மீது அல்கா லம்பா நீண்ட நாள்களாக அதிருப்தியில் இருந்து வந்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சுயேச்சை வேட்பாளராக எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு வெள்ளிக்கிழமை அல்கா லம்பா டுவிட்டரில் செய்துள்ள பதிவில், "எனது ராஜிநாமாவை டுவிட்டரிலும் ஏற்றுக் கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் பரத்வாஜ் அகந்தையுடன் தெரிவித்திருந்தார். 
தற்போது ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியே செல்வதற்கான நேரம் வந்துவிட்டது. ஆகையால், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை தொண்டர் பதவியில் இருந்து விலகும் எனது ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆம் ஆத்மி கட்சி தற்போது சிறப்பானவர்களுக்கான கட்சியாக மாறிவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அல்கா லம்பா, சுமார் 20 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்தார். 
பின்னர் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியவுடன் அதில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சாந்தினி சௌக் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையுடன் அவருக்கு கருத்து மோதல் ஏற்பட்டது. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் செய்யவில்லை. 
அந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்விக்கு யார் பொறுப்பேற்பது என முதல்வர் கேஜரிவாலுக்கு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான படுகொலைச் சம்பவத்துக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி காரணமாக இருந்ததால் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைப் திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி  கட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அல்கா லம்பா எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கான எந்தவிதமான தண்டனையும் ஏற்க தயாராக உள்ளதாகவும் அல்கா லம்பா தெரிவித்திருந்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT