புதுதில்லி

அயோத்தி வழக்கு: நேரலையில் ஒளிபரப்பக் கோரும் மனு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

7th Sep 2019 01:52 AM

ADVERTISEMENT

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோருவது தொடர்பான வழக்கின் விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, மூலவர் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை விடியோவில் பதிவு செய்ய வேண்டும் அல்லது நேரலையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சார்யா, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், அரசியல் சாசன அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் ஆகியவற்றின் விசாரணைகளை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி அனுமதி அளித்தது. மேலும், உச்சநீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்லிடப்பேசி எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  பத்திரிகையாளர்கள்,  செல்லிடப்பேசியில் நீதிமன்ற நடவடிக்கைகளை படம் பிடித்து தங்களது சுட்டுரைப் பக்கங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள். அப்படியிருக்கும்போது, நீதிமன்றமே வழக்கு விசாரணைகளை விடியோவாக ஏன் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கோவிந்தாசார்யா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் விகாஸ் சிங் ஆஜராகி, இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT