புதுதில்லி

91 வயது முதியவர் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து கடத்தல்! வீட்டுப் பணியாளரைத் தேடும் போலீஸ்

4th Sep 2019 07:35 AM

ADVERTISEMENT

தெற்கு தில்லியில் வசதி படைத்தவர்கள் வசித்து வரும் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 91 வயதுடைய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மர்மமான முறையில் காணாமல் போனதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை அவரது வீட்டுப் பணியாளர் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து, அதை டெம்போ வேனில் வைத்து கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து காவல் துறை உ யரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் கிஷண் கோஸ்லா (91). இவரது மனைவி சரோஜ் கோஸ்லா (87). கடந்த சில மாதங்களுக்கு முன் கிரேட்டர் கைலாஷிஸ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இவர்களுக்கு இரு மகன்கள். ஒருவர் ஆஸ்திரேலியாவில் உள்ளார். தொழிலதிபரான மற்றொருவர் கிரேட்டர் கைலாஷ் அருகே உள்ள பகுதியில் வசித்து வருகிறார். 
கிஷண் கோஸ்லாவின் வீட்டில் பணியாளராக வேலைப்பார்த்து வந்தவர் கிஷண். பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தில்லியில் சங்கம் விஹார் பகுதியில் வசித்து வருகிறார். 
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது தாயைப் பார்ப்பதற்காக சரோஜ் கோஷ்லாவின் மகன் கிரேட்டர் கைலாஷுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தாய் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததைப் பார்த்தார். வீட்டில் தந்தையைக் காணவில்லை. மேலும், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, நகைகள், ரொக்கப் பணம் ஆகியவற்றைக் காணவில்லை. இதையடுத்து, தனது தந்தை கிஷண் கோஸ்லா ஞாயிற்றுக்கிழமை முதல் மர்மமான முறையில் காணாமல் போனதாக போலீஸில் புகார் செய்தார்.
இது குறித்து சரோஜ் கோஷ்லா மயக்கம் தெளிந்த பிறகு, போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, சனிக்கிழமை இரவு வீட்டு வேலைக்காரர் கிஷண், தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகவும், அதன் பிறகு மயக்கமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்குடியிருப்புப் பகுதியில் காவல் பணியில் இருந்த காவலாளியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கிஷண் கோஸ்லாவின் வீட்டு வேலைக்காரர் ஒரு டிரக்கில் குளிர்சாதனப் பெட்டியுடன் சென்றதாகவும், அது குறித்து கேட்டபோது, பழுது பார்ப்பதற்காக குளிர்சாதனப் பெட்டியை எடுத்துச் செல்வதாகக் கூறியதாக காவலாளி தெரிவித்துள்ளார்.
எனவே, அந்த முதியவரை வீட்டு வேலைக்காரர் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து டிரக்கில் வைத்து கடத்தியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அந்தக் குடியிருப்புப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. இருப்பினும், வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அந்த முதியவரையும், அவரது வீட்டு வேலைக்காரரையும் தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT