புதுதில்லி

வழக்குரைஞர்கள் நலத் திட்டப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு  உத்தரவு

4th Sep 2019 07:33 AM

ADVERTISEMENT

வழக்குரைஞர்கள் நல்வாழ்வுத் திட்டப் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கேஜரிவால், "வழக்குரைஞர்களின் நல்வாழ்வு திட்டப் பணிகள் தொடர்பாக எனது அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. 
நிகழாண்டு நிதிநிலை அறிக்கையில், வழக்குரைஞர்கள் நலத் திட்டப் பணிகளுக்கு ரூ.50 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த நிதியைப் பயன்படுத்தி நலத் திட்டப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு சட்டத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், வழக்குரைஞர் நலத் திட்டப் பணிகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தில்லி தலைமைச் செயலர் விஜய் குமார் தேவுக்கு தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 
வழக்குரைஞர்கள் நலத் திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவிடப்படவில்லை என பத்திரிகை செய்திகள் வாயிலாக துணைநிலை ஆளுநர் அறிந்து கொண்டார். சட்டத் துறையில் வழக்குரைஞர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அவர்களுக்கு நலத் திட்டங்கள் கிடைப்பது அவசியமாகும். அப்போதுதான், சட்ட அமைப்பு சிறப்பாக இயங்க முடியும். 
வழக்குரைஞர்களின் நல்வாழ்வு தொடர்பான திட்டங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தலைமைச் செயலருக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT