புதுதில்லி

மெட்ரோ ரயில் முன் குதித்து பாதுகாவலர் தற்கொலை: இரு நாளில் தொடர் சம்பவம்

4th Sep 2019 07:35 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகர் வலயப் பகுதி மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஓடும் ரயில் முன் குதித்து தனியார் நிறுவனப் பாதுகாவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நொய்டா செக்டார்-61 மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்கிழமை காலை 11. 30 மணியளவில் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென ரயில் முன் குதித்தார். இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
விசாரணையில் அவர் நொய்டா செக்டார்-44 பகுதியில் வசித்து வந்த தனியார் நிறுவனப் பாதுகாவலர் சஞ்சித் குமார் என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நொய்டா ஃபேஸ்-3 காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதாக அந்த காவல் அதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், "இச்சம்பவம் காரணமாக புளூலைன் வழித்தடத்தில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. செக்டார் 61 ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவம் காரணமாக அக்ஷர்தாம் மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. எனினும் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இரு நாளில் இரு சம்பவம்:  புளூலைன் மெட்ரோ ரயில் வழித்தடம் தில்லியில் உள்ள துவாரகா மற்றும் நொய்டாவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை புளூலைன் வழித்தடத்தில் உள்ள ஜண்டேவாலன் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் ரயில் முன் குதித்து 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது. இந்த நிலையில், அடுத்த சம்பவமாக நொய்டா செக்டார்-61 மெட்ரோ ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT