புதுதில்லி

பெண்ணையாற்றில் தடுப்பணை விவகாரம்: தமிழக அரசின் மனு மீது நாளை விசாரணை

4th Sep 2019 07:36 AM

ADVERTISEMENT

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு வியாழக்கிழமை (செப். 5) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வழக்குத் தொடுக்கப்பட்டது. 
இந்த வழக்கில் பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு 6 வாரங்களும், கர்நாடக அரசு தாக்கல் செய்யும் பதில் மனு மீது தமிழக அரசு பதிலளிக்க 4 வாரங்களும் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 7-இல் உத்தரவிட்டது. 
இந்த வழக்கில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்கள் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிடபட்டிருந்தது. 
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தொடர்புடைய வேறு வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றது. 
பிற்பகலிலும் வேறு வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றதால், நீதிமன்றஅலுவல் முடியும் நேரத்தில் நீதிபதி யு.யு. லலித்திடம் பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் விவகாரத்தை தமிழக அரசின் வழக்குரைஞர்கள் ஜி.உமாபதி, பரமசிவம் ஆகியோர் குறிப்பிட்டனர். 
இதையடுத்து, இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT