புதுதில்லி

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்: தில்லியில் முதல் நாளிலேயே 3,900 பேருக்கு அபராதம்

4th Sep 2019 07:37 AM

ADVERTISEMENT

புதிய வாகனச் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியில் சாலை விதிகளை மீறியதாக 3,900 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.
"மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா -2019' அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இச்சட்டத்தில் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் அமலான முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியில் மட்டும் 3,900 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துக் காவல் துறையின் இணை ஆணையர் என்.எஸ். புந்தேலா கூறியதாவது: 
புதிய வாகனத் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, சாலை விதிகளை மீறு வோர்களை அடையாளம் காணும் வகையில், போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இதையொட்டி, தலைநகர் தில்லியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
இதில் புதிய சட்டத்தின்படி, சாலை விதிகளை மீறியதாக முதல் நாளன்று மொத்தம் 3,900 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைப் போக்குவரத்து போலீஸார் நேரடியாக வசூலிக்க முடியாது. இதனால், இந்த நோட்டீஸ்களின் நகல்களும் இ-கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 45 பேர், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக 557 பேர், வாகனங்களை வேகமாக ஓட்டியதாக 42 பேர், சிகப்பு சமிக்ஞை விளக்கை (சிக்னல்) தாண்டிச் சென்றதாக 207 பேர், சீட் பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 195 பேர், இரு சக்கர வாகனத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மூவர் சவாரி செய்த வகையில் 28 பேர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 336 பேர் உள்பட மொத்தம் 3,900 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
வாகனத் தணிக்கையின் போது ஊழலைக் கட்டுப்படுத்தும் வகையில், உடலில் அணியக்கூடிய கேமராக்கள் போக்குவரத்துப் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த வகையில், தில்லி போக்குவரத்துக் காவல் துறையில் 626 கேமராக்கள் உள்ளன. சாலை விதிகளை மீறிய வகையில் போலீஸாருடன் பிடிபடுவோரிடம் போலீஸார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பதிவு செய்யும் நோக்கில் இந்த கேமராக்கள் போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன. சம்பவங்கள் நேரடியாக கேமராவில் பதிவாவதால் ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்றார் அவர்.

நொய்டாவில் இரண்டு நாள்களில் 2,304 பேர் மீது நடவடிக்கை
தேசியத் தலைநகர் வலயம், நொய்டாவில் புதிய வாகனச் சட்டத்தின்படி, சாலை விதிகளை மீறியதாக சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் இரண்டு நாள்களில் மொத்தம் 2,304 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து போக்குவரத்துக் காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: நொய்டாவில் புதிய வாகனச் சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 975 பேர், இரண்டாவது நாளான திங்கள்கிழமை 1,329 பேர் என இரண்டு நாள்களில் மொத்தம் 2,034 பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தியதாக அதிகம் பேருக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று 293 பேர், திங்கள்கிழமை அன்று 287 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக, திங்கள்கிழமை 334 பேர், ஞாயிற்றுக்கிழமை 237 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக திங்கள்கிழமை 210 பேர், ஞாயிற்றுக்கிழமை 151 பேர் சிக்கினர். சிவப்பு விளக்கு சமிக்ஞையைத் தாண்டிச் சென்றதாக திங்கள்கிழமை 40 பேர், ஞாயிற்றுக்கிழமை 13 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், ஒரே வாகனத்தில் மூவர் பயணம் செய்தது, மாசுவை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது. நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தியது, செல்லிடப்பேசிகளில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாகவும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நொய்டா போக்குவரத்துக் காவல் துறை கண்காணிப்பாளர் அனில் குமார் கூறியதாவது: 
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் புதிய சட்டத்தின்படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டினால் முன்பு ரூ.100 ஆக இருந்த அபராதம் இப்போது தலா ரூ.1,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவோர்களுக்கு ரூ.1,000  முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்க புதிய சட்டம் வழிவகுக்கிறது.
மொத்தத்தில் இந்தப் புதிய சட்டத்தின்படி அனைத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இவ்வளவு பெரிய தொகையை செலுத்த எந்த வாகன ஓட்டியும் தயாராக இருக்க மாட்டார். எனவே, வாகன ஓட்டிகள் விதிகளை மதித்து நடப்பார்கள். இதன் மூலம் சாலை விபத்துகள் குறைவதற்கு வழி ஏற்படும். கடந்த இரண்டு நாள்களில் சாலை விதிமீறல்கள் தொடர்பாக அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, விரைவுச் சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையையும் சேர்த்தால் அதிகமாக இருக்கும் என்றார் காவல் அதிகாரி அனில் குமார்.

தில்லியில் சிக்கியவர்கள்....
தலைக்கவசம் அணியாததற்காக      -       336
மூவர் பேர் சவாரி செய்ததற்காக     -        28 
ஆபத்தான வகையில் ஓட்டியதாக     -     557
மது அருந்திவிட்டு ஓட்டியதாக     -     45
வேகமாக ஓட்டியதாக         -     42
சிக்னலைத் தாண்டியதாக         -      207
சீட் பெல்ட் அணியாததற்காக     -     195

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT