புதுதில்லி

"ஐ லவ் கேஜரிவால்' பிரசாரம் பெரும் வெற்றி: ஆம் ஆத்மி

4th Sep 2019 07:33 AM

ADVERTISEMENT

"ஐ லவ் கேஜரிவால்' என்ற ஆம் ஆத்மி கட்சியின் பிரசார இயக்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தில்லிப் பொறுப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
"நான் கேஜரிவாலை நேசிக்கிறேன்' எனப் பொருள்படும் "ஐ லவ் கேஜரிவால்' என்ற பிரசாரத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லியில் ஆரம்பித்தோம். இரண்டு தினங்களில் இந்தப் பிரசார இயக்கம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. 
தில்லியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தங்களது ஆட்டோக்களில் "ஐ லவ் கேஜரிவால்" என எழுதி வைத்திருப்பதைப் பார்த்தோம். அதனால் கவரப்பட்டு "ஐ லவ் கேஜரிவால்' என்ற பிரசார இயக்கத்தைத் தொடங்கினோம். 
ஒவ்வொரு நாளும் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இப்பிரசாரக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இக்கூட்டங்களுக்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பெருவாரியாக மக்கள் பங்கேற்றுள்ளனர். "ஐ லவ் கேஜரிவால்' என்ற வாசகங்களைக் கொண்ட டி- சர்ட்டுகளை அணிந்து பெருமளவு மக்கள் இக்கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் பாஜகவை மக்கள் நிராகரிப்பது தெளிவாகத் தெரிகிறது. குடிநீர் நிலுவைக் கட்டணத்தை ரத்துச் செய்யும் தில்லி அரசின் அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளதானது மக்களைக் கோபப்படுத்தியுள்ளது. தில்லி மீண்டும்ஆம் ஆத்மி ஆட்சி அமையும் என்றார் அவர். 

 

கேஜரிவாலுக்கு மட்டும் பொருந்தும் -பாஜக பதிலடி
"ஐ லவ் கேஜரிவால்' என்ற வார்த்தை கேஜரிவாலுக்கு மட்டும் பொருந்தும். ஏனென்றால், கேஜரிவால் தன்னை மட்டுமே நேசிக்கிறார். தில்லி மக்களை  அவர் நெசிக்கவில்லை என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை பாஜகவின் தில்லி தலைவர் கூறியதாவது: முதல்வராக கேஜரிவால் முழுமையாகத் தோற்றுவிட்டார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், மக்கள் அவரை வெறுக்கிறார்கள். இந்நிலையில், சரிந்துபோயுள்ள அவரின் பெயரைக் காக்கும் வகையில், ஐ லவ் கேஜரிவால் என்ற பிரசார இயக்கத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது. உண்மையில், ஐ லவ் கேஜரிவால் என்பது கேஜரிவாலுக்குப் பொருந்தும். ஏனென்றால், கேஜரிவால் தன்னை மட்டுமே நேசிக்கிறார். தில்லி மக்களை அவர் நேசித்திருந்தால், தில்லி அரசின் ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படிருப்பார்கள். அங்கீகாரம் இல்லாத காலனிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கும். தில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என்றார் அவர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT