புதுதில்லி

இந்தியா கேட் பகுதியில் லாரி மோதி தந்தை, மகள் சாவு

4th Sep 2019 07:33 AM

ADVERTISEMENT

இந்தியா கேட் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரமாக நின்றிருந்த பாதசாரிகள் மீதும், ஆட்டோக்கள், ஸ்கூட்டர் மீதும் மோதி ஏற்படுத்திய விபத்தில் தந்தையும், 8 வயது மகளும் உயிரிழந்தனர். ஐஸ்கிரீம் சாப்பிட குடும்பத்துடன் சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து தில்லி போலீஸார் கூறியதாவது:
கேவல் திவான் (42) தனது மனைவி, இரண்டு குழந்தைகள் மாண்யா, பூணம் ஆகியோருடன் கிழக்கு தில்லி கீதா காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்து திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். அவர்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்தியா கேட் பகுதியில் உள்ள மான்சிங் சாலை சந்திப்பில் சாலையோரமாக நின்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளனர். அப்போது, அந்தப் பகுதி சாலையில் வேகமாக வந்த லாரி ஒன்று சிக்னலை இடித்துதள்ளிவிட்டு, பாதசாரிகள் நடைமேடையில் ஏறி சென்று, மான்சிங் சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த மூன்று ஆட்டோக்கள் மீது மோதிவிட்டு, பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் படுகாயமடைந்த கேவல் திவானையும், சிறுமி மாண்யாவையும் ராம்மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டாத மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த இருவர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை ஓட்டிய ராமனின் வலது கை எலும்பு முறிந்தது. எல்என்ஜேபி மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். மது அருந்தி ராமன் வாகனத்தை ஓட்டிநாரா என்பது குறித்த பரிசோதனை நடைபெற்று வருகிறது. 
வேகமாக வந்த லாரி மோதியதில் ஆட்டோக்களும், ஸ்கூட்டரும் அப்பளம் போல் நொறுங்கிபோயுள்ளன. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து  விசாரணை தொடங்கியுள்ளது என்றார்.
 

உயிரைக் கொடுத்து மனைவி,  குழந்தையைக் காப்பாற்றிய தந்தை
வேகமாக வந்த லாரியில் சிக்காமல் இருக்க தனது மனைவி பூணம், குழந்தை மைரா ஆகிய இருவரை தந்தை கேவல் திவான் தள்ளிவிட்டு காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த விபத்து குறித்து பூணத்தின் சகோதரி லாவ்லின் கூறுகையில், "இந்தியா கேட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு கேவல் திவான், பூணம், மாண்யா, மைரா ஆகிய நான்கு பேரும் வீட்டிற்கு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறுவதற்காக தயாரானார். கேவல் மோட்டார் சைக்கிளை இயக்குவதற்கு அமர்ந்துள்ளார். மாண்யா அவருக்கு முன்பு நின்றுள்ளார். பூணம், மூன்று வயதுள்ள மைராவை கையில் எடுத்துக் கொண்டு இருக்கையில் அமர செல்லும்போதுதான் லாரி தடுப்புகளை இடித்துக் கொண்டு வேகமாக வந்துள்ளது. இதைக் கண்ட திவான் கண் இமைக்கும் நொடியில் பூணத்தையும், மைராவையும் பிடித்து தூரமாக தள்ளிவிட்டு காப்பாற்றியுள்ளார். ஆனால், அதற்குள் லாரி திவான், மாண்யா மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்' என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT