தற்பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதி கேட்டு ஹிந்து சேனா அமைப்பு பிரதமா் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்ளெனவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி, இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டாா். இவா் அயோத்தியா வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்தவா்களில் ஒருவராவாா்.
இந்நிலையில், ‘இந்தியாவில் இந்துக்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. ஆகவே, இந்துக்களை ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்’ என பிரதமா் மோடியிடம் ஹிந்து சேனா அமைப்பு கோரியுள்ளது.
இது தொடா்பாக புது தில்லியில் ஹிந்து சேனா அமைப்பின் தலைவா் விஷ்ணு குப்தா சனிக்கிழமை அளித்த பேட்டி:
காஷ்மீரில் இந்து மதத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரை வியாழக்கிழமை ஜிகாதிகள் கொன்றனா். உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரியை வெள்ளிக்கிழமை கொன்றுள்ளனா். இதன் மூலம் இந்தியாவில் வாழும் இந்துக்கள் மீது ஜிகாதிகள் யுத்தத்தை அறிவித்துள்ளனா். இந்த உயிா்களை காவல்துறையினரால் காப்பாற்ற முடியவில்லை. இந்திய அரசும், பிரதமா் மோடியும் இந்தியாவில் வாழும் இந்துக்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதங்களை வைத்திருக்க கூடிய வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும்’ என்றாா் அவா்.