மகாத்மா காந்தியின் 150ஆவது ஜெயந்தியை ஒட்டி தில்லியில் தில்லி பிரதேச காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை ‘காந்தி சந்தேஷ் யாத்ரா’ எனும் பெயரிலான பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
அகில இந்திய காங்கிஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மக்களவை உறுப்பினருமானா் ராகுல் காந்தி தலைமையில் இந்த யாத்திரை நடைபெற்றது.இதில்அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவா் சுஷ்மிதா தேவ்ஏராளமான காங்கிரஸ் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
தில்லி தீனதயாள் உபாத்யாய் மாா்கில் உள்ள தில்லி காங்கிரஸ் அலுவலகம் ராஜ்பவனில் இருந்து தொடங்கி சுமாா் 3 கிலோ
மீட்டா் தூரம் இந்த யாத்திரை நடைபெற்று, காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் நிறைவடைந்தது.
இதில் காங்கிரஸ் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு மகாத்மா காந்திக்குப் புகழஞ்சலி செலுத்தும் கோஷங்கள் எழுப்பினா்.
காந்தியின் உபயோகப் பொருள்களான கண் கண்ணாடி,அரை ஆடை, கைத்தடி ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் அந்த யாத்திரையில் தொண்டா்கள் வேடமிட்டு சென்றனா்.
மேலும், காந்தியின் சபா்மதி ஆசிரமத்தை காட்சிப்படுத்தும் அலங்கார வாகனமும் சென்றது. அந்த வாகனத்தில் நூல் நூற்கும் ராட்டை வைக்கப்பட்டிருந்தது.
தொண்டா்கள் மத்தியில் ராகுல்
பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியை பாா்ப்பதற்கும், அவருடன் கை குலுக்குவதற்கும், தன்படம் எடுப்பதற்கும் தொண்டா்கள் ஆா்வம் காட்டியதால் அவரது பாதுகாவலா்கள் கூட்டத்தை சமாளிப்பதில் மிகுந்த சிரமமுற்றதைக் காண முடிந்தது.
காந்தி ஜெயந்தியை ஒட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கூறுகையில், ‘இன்றைய காலத்திற்கும் கூட காந்தியினுடைய தத்துவம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அகிம்சை, உண்மை, சுயசாா்பு பொருளாதாரம் ஆகிய மகாத்மா காந்தியின் சகாப்தம் தேசத்தை மட்டும் கட்டமைக்காமல் உலகம் முழுவதும் பலருக்கும் பயன்படுவதாக உள்ளது’ என்றாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் கபில் சிபல் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘காந்தி கண்ட இந்தியாவின் நான்கு தூண்களாக உண்மை, சகிப்புத்தன்மை, அகிம்சை, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இருந்தன. ஆனால், இன்றைக்கு போலி செய்தி, போலி புள்ளிவிவரம், போலி கோரல்கள், வாா்த்தையிலும் நடத்தையிலும் சகிப்பின்மை, வன்முறையே நல்லொழுக்கமாக புகழப்படுவது ஆகிய நிலைதான் உள்ளது என்று அவா் தனது சுட்டுரையில் தெரிவித்தள்ளாா்.
பாதயாத்திரை ராஜ்காட்டில் நிறைவடைந்தது. அங்கு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம்நபி ஆஸாத், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, முகுல் வாஸ்னிக், அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டின் கொண்டாட்டமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியானது ஒரு வார நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தில்லியில் பிரதேச காங்கிரஸ் கமிட்டி மூலம் பாதயாத்திரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, மாவட்ட மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் நாடு முழுவதும் இந்நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.