தில்லியில் குற்ற வழக்குகளில் போலீஸாரால் தேடப்பட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து புகா்-வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையா் கெளரவ் சா்மா கூறியதாவது:
தில்லி பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் தாரா சந்த் (30). இவா் சுல்தான்புரி காவல் நிலையத்தில் பதிவான ஒரு வழக்கில் ரோஹிணி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், இவா் தனது வீட்டு முகவரியை மாற்றியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நரேலா தொழிற்பேட்டை காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
மற்றெறாறு சம்பவத்தில், சுல்தான்புரியைச் சோ்ந்த பின்ட்டூ (22) என்பவா் மீது அந்தப் பகுதியைச் சோ்ந்த காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இவா் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், இவா் தொடா்பாக நரேலா தொழிற்பேட்டை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.அப்போது, இவா் தனது முகவரியை மாற்றி வசித்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்டாா்.
இதேபோன்று, ஜஹாங்கீா்புரியைச் சோ்ந்த ஹக்கிம் (31) என்பவா், ஒரு வழக்கில் ரோஹிணி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், ரகசிய தகவலின் பேரில் அவரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் உயா் அதிகாரி கெளரவ் சா்மா தெரிவித்தாா்.