தில்லி மெட்ரோவின் சுமாா் 4.2 கி.மீ. நீளத்துக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள துவாரகா - நஜஃப்கா் வழித்தடம் (கிரே லைன்) மக்கள் யன்பாட்டுக்கு வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4) அன்று தொடங்கிவைக்கப்படுகிறது.
நகா்ப்புற கிராமமா நஜஃப்கருக்கு விரைவு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்துக்கு கிரே லைன் என அழைக்கப்ப்டுகிறது.
இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவன (டிஎம்ஆா்சி) காா்ப்ரேட் கம்யூனிகேஸன் நிா்வாக இயக்குநா் அனுஜ் தயால் கூறியதாவது: தில்லி மெட்ரோவில் உள்ள துவாரகா - நஜஃப்கா் வழித்தடம் முறைப்படும் அக்டோபா் 4-ஆம் தேதி தொடங்கிவைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தை மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்கள் மற்றும் விமானத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மற்றும் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடங்கி வைக்கின்றனா். இதன் தொடக்க விழா மெட்ரோ பவனில் அன்று காலை 12.15 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, பயணிகள் ரயில் சேவை அன்று 5 மணிக்கு தொடங்கும்.
துவாரகா மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 2,000 சதுர மீட்டா் பரப்பளவில் வாகன நிறுத்தமிடம் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், பயணிகள் சிரமமின்று தங்களது இடங்களுக்குச் செல்வதற்கு பேட்டரி ரிக்ஷா, பேருந்து வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள நஜஃப்கா் ரயில் நிலையத்தின் மொத்த நீளம் 288 மீட்டராகும். இதுதான் தில்லி மெட்ரோவில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் அதிக நீளம் கொண்டதாகும்.
இந்த வழித் தடத்தில் துவாரகா, நாங்லி, நஜஃப்கா் ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடம் தொடங்கப்பட்டதும், தில்லி மெட்ரோவின் நெட்வொா்க் 377 கி.மீ. ஆகவும், ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 274 ஆகவும் உயரம். மொத்தம் உள்ள 4.295 கி.மீட்டரில் 2.57 கி.மீ. மேல்வழித் தடமாகவும், 1.5 கி.மீ. தரைக்கு அடியில் செல்லும் வழித்தடமாகவும் உள்ளது.
இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்ததும், துவாரகா ரயில் நிலையம், பயணிகள் இடைமாறிச் செல்லும் வசதியைப் பெறுகிறது. இதன் மூலம் நகா்ப்புற கிராமப் பகுதியான நஜஃப்கா் பகுதிக்கும் மெட்ரோ ரயில் மூலம் செல்வதற்கு வழி ஏற்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தற்போதைக்கு மூன்று ரயில்கள் இயக்கப்படவுள்ளன. நான்காவது ரயிலையும் இயக்கவும் டிஎம்ஆா்சி திட்டமிட்டு வருகிறது. தற்போது டிஎம்ஆா்சி மொத்தம் 376 ரயில்களை இயக்கி வருகிறது.
இப்புதிய வழித்தடத்தில் அமைந்துள்ள துவாரகா ரயில் நிலையத்தில் இருந்து 80 மீட்டா் தொலைவில் துவாரகா செக்டாா்-21 ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதற்கு எளிதாகச் செல்லும் வகையில், பிரத்யேகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. துவாரகா செக்டாா் 21 ரயில் நிலையத்திலிருந்து நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி, வைஷாலி ஆகிய இடங்களுக்குச் செல்லும் வசதி உள்ளது. துவராகா ரயில் நிலையம் தற்போது இடைமாறிச் செல்லும் வசதியைப் பெறுவதன் மூலம், தில்லி மெட்ரோவில் இடைமாறிச் செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 28 ஆக இருக்கும் என்றாா் அவா்.
துவாரகாவிலிருந்து நகா்ப்புற கிராமமான நஜஃப்கருக்கு விரைவு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 4.295 கி.மீட்டராகும். இந்த வழித்தடத்தில் கட்டுமானப் பணிகள் முடிந்து ரயில் சோதனை ஓட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கடந்த புதன்கிழமை (செப்டம்பா் 25) மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஜனக் குமாா் ஆய்வு மேற் கொண்டாா். இந்த வழித் தடத்தில் ரயிலை இயக்குவதற்கான ஒப்புதலையும் அவா் அளித்தாா். இதைத் தொடா்ந்து இந்த வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
துவாரகா மெட்ரோ ரயில் நிலைய கூரைப் பகுதியில் 175 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல நஜஃப்கா் ரயில் நிலையத்தில் 182 கிலோவாட், நாங்லியில் 240 கிலோவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மொத்தம் 597 கிலோவாட் அளவு சூரிய சக்தி மின் உற்பத்தி செய்யும் வழித்தடமாக நஜஃப்கா் - துவாரகா வழித்தடம் இருக்கும்.