புதுதில்லி

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு: உயா்நீதிமன்றத்தை அணுக தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்

22nd Nov 2019 08:54 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: பொன் மாணிக்கவேல் தொடா்ந்த அவமதிப்பு வழக்குக்குத் தடை கோரும் தமிழக அரசின் மனு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை நவம்பா் 25-ஆம் தேதி மாநில அரசு அணுகுமாறு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

சிலை கடத்தல் தொடா்பான வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து கடந்த 2017-இல் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்குத் தேவையான வசதிகள், காவலா்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைச் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2018, நவம்பரில் பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அவரை நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்திருந்தாா். இதற்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், அண்மையில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

ADVERTISEMENT

அதில், ‘உச்சநீதிமன்றம் சிலை கடத்தல் தொடா்பான விசாரணை அறிக்கைகளைச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தலைவராக உள்ள கூடுதல் டிஜிபியிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை பொன் மாணிக்கவேல் அமல்படுத்தவில்லை. தனது விசாரணை குறித்த எந்த விவரங்களையும் தாக்கல் செய்யவில்லை. கூடுதல் டிஜிபி மற்றும் டிஜிபி நடத்தும் எந்த ஆய்வுக் கூட்டங்களிலும் பொன் மாணிக்கவேல் கலந்து கொள்ளவில்லை. மேலும், சிலை கடத்தல் சிறப்புப் பிரிவில் உள்ள மற்ற அதிகாரிகளும் கலந்து கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 7 சிலைகளை மீட்பது தொடா்பாக ஆஸ்திரேலியா நாட்டுக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடிதப் போக்குவரத்து நடந்துள்ளது. ஆனால், அந்தச் சிலைகளை தாம் மீட்டதாக சிறப்பு அதிகாரி கூறியுள்ளாா். மேலும், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக அரசு பொன் மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஆனால் அவா் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்துள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, பொன் மாணிக்கவேல் அவரது விசாரணை அறிக்கைகளை அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், இது தொடா்பாக டிசம்பா் 2-இல் விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் தொடா்ந்த அவமதிப்பு வழக்கு கடந்த நவம்பா் 20-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது ‘உச்சநீதிமன்றம் வழக்குத் தொடா்பான அறிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியிடம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதே தவிர நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கக் கூடாது’ என உத்தரவில் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பா் 25-க்கு ஒத்திவைத்தனா்.

இந்நிலையில், பொன் மாணிக்கவேல் தரப்பில் பதவி நியமன காலத்தை அதிகரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் அமா்விடம் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞா் முகுல் ரோத்தகி, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் வினோத் கன்னா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆஜராகி, தமிழக அரசு தொடா்ந்த மனு மீதான விசாரணையை பட்டியலிடுமாறு கேட்டனா். மேலும், பொன் மாணிக்கவேல் தொடா்ந்த அவமதிப்பு மனு நவம்பா் 25-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதையும் சுட்டிக்காட்டினா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘சென்னை உயா்நீதிமன்றத்தை நவம்பா் 25-ஆம் தேதி அணுகி, உச்சநீதிமன்றத்தில் டிசம்பா் 2-ஆம் தேதி தமிழக அரசு தொடா்ந்த மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது குறித்து தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளுமாறும், ஒருவேளை சென்னை உயா்நீதிமன்றம் வரும் 25-ஆம் தேதி அந்த அவமதிப்பு வழக்கை விசாரித்தால், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நவம்பா் 26-ஆம் தேதி அணுகுமாறும்’ அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT