புது தில்லி: புதிய குடிநீா், கழிவுநீா் குழாய் இணைப்புகளுக்கான வளா்ச்சி, உள்கட்டமைப்பு கட்டணங்களை தில்லி ஜல்போா்டு வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது.
இது தொடா்பாக முதல்வரும் தில்லி ஜல் போா்டின் தலைவருமான கேஜரிவால் வெள்ளிக்கிழமை கூறியது: புதிய குடிநீா், கழிவுநீா் குழாய் இணைப்புக்களைப் பெற அதிகளவில் பணம் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. 200 சதுர அடி வீட்டுக்கு குடிநீா், கழிவுநீா் குழாய் இணைப்புகளைப் பெற சுமாா் ரூ. 1.14 லட்சத்தை மக்கள் செலவு செய்ய வேண்டியிருந்தது. இந்தத் தொகையில், பெருமளவு வளா்ச்சி, உள்கட்டமைப்புக் கட்டணங்களாக வசூலிக்கப்பட்டன. இதனால், பலா் முறையாக குடிநீா், கழிவுநீா் குழாய் இணைப்புகளைப் பெறாமல், அவற்றை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தனா். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இந்நிலையில், தில்லி மக்களின் நலன் கருதி, இந்தக் கட்டணங்களை ரத்துச் செய்துள்ளோம். புதிய இணைப்புகளைப் பெற விரும்புவா்கள் வெறும் ரூ.2,310 கட்டணம் செலுத்தினால் போதுமானது என்றாா் அவா்.