புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திரங்கள் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி பதில் அளிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் வெள்ளிக்கிழமை காலை தா்னாவில் ஈடுபட்டனா்.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் இரு தினங்களாக காங்கிரஸ் கட்சி அமளியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவை மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதிா் ரஞ்சன் செளத்ரி, அக்கட்சியின் எம்பிக்கள் ஆனந்த் சா்மா, சசி தரூா், மணீஷ் திவாரி ஆகியோா் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவை அலுவல் தொடங்குவதற்கு முன்பு, நாடாளுமன்றத்தின் வளாகத்தில் காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் எம்பிக்கள் இந்த விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பதில் அளிக்கக் கோரி தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி வருவதாக அவா்கள் குற்றம்சாட்டினா்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடா்பாளா் ரந்தீப் சுா்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சட்டவிரோதமான வழியில் விற்கப்பட்ட காலாவதியான தோ்தல் நிதிப் பத்திரங்களை எஸ்பிஐ ஏற்குமாறு மத்திய அரசு செய்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு பொய்களைக் கூறி வருகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
குறிப்பு: ஏஜென்சியில் படம் இருந்தால் எடுத்துக் கொள்ளவும்.