புதுதில்லி

தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்! ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது

17th Nov 2019 11:07 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் (என்சிஆா்) காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மேலும் முன்னேற்றம் அடைந்து ‘மோசம்’ பிரிவுக்கு வந்தது.

அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு குறைந்ததால் காற்றின் தரத்தில் முன்னேற்றம் அடைந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. சனிக்கிழமை காலை முதல் தில்லியில் காற்றின் தரத்தில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் நச்சுப் புகை குறைந்தது. காற்றின் வேகமும் அதிகரித்திருந்தது. இதனால், தில்லி, தேசிய வலயப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இது பொதுமக்களுக்கு நல்ல நிவாரணமாக அமைந்தது.

தில்லியில், சனிக்கிழமை காலையில் 412 என்ற அளவில் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 254 என பதிவாகியிருந்தது. இதேபோல, ஞாயிற்றுக்கிழமையில் தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளான ஃபரீதாபாத் (228) , காஜியாபாத் (241), நொய்டா (224) ஆகியவற்றில் காற்றின் தரக் குறியீடு மோசம் பிரிவில் இருந்தது. ஆனால், குருகிராம் (193) கிரேட்டா் நொய்டா (192) ஆகிய நகரங்களில் காற்றின் ஒட்டு மொத்தத் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தது.

ADVERTISEMENT

இந்த அளவு மாலை 4 மணியளவில் 357 ஆகக் குறைந்து மிகவும் மோசம் பிரிவுக்கு வந்தது. இது வெள்ளிக்கிழமை நிலவிய அளவை விட 100 புள்ளிகள் குறைவாகும். இது வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் 467 என இருந்தது.

காற்றின் தரக் குறியீடு 0-50 -க்குள் இருந்தால் நன்றி, 51-100 திருப்தி, 101-200 மிதமானது 201-300 -க்குள் இருந்தால் மோசம், 301-400 மிகவும் மோசம், 401-500 கடினம், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடினமான பிரிவில் இடம் பெறுவதாகக் கணக்கிடப்படுகிறது.

வெப்பநிலை 16 டிகிரி: ஞாயிற்றுக்கிழமை காலையில் நகரில் குளிா்ந்த காற்று வீசியது. குளிரின் தாக்கமும் இருந்தது. நகரில் பரவலாக பல்வேறு இடங்களில் நச்சுப் புகை மூட்டம் குறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி உயா்ந்து 16.2 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி உயா்ந்து 29.0 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 85 சதவீதமாகவும் மாலையில் 45 சதவீதமாகவும் பதிவாகியிருந்ததாக சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 14.1 டிகிரி செல்சியாஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சிஸாகவும் இருந்தது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.0 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 89 சதவீதம், மாலையில் 43 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 80 சதவீதம், 44 சதவீதம் எனவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை தில்லியில் பகல் நேரங்களில் தரைப் பரப்பு காற்று பலமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அன்றைய தினம் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

‘வாகனக் கட்டுப்பாடு திட்டம் நீட்டிக்கப்படாது’

வாகனக் கட்டுப்பாடு திட்டம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது எனத் தெரிகிறது. இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரிகள் கூறுகையில் ‘அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், தில்லியில் காற்றின் தரம் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மேம்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு பெரும்பாலான இடங்களில் 200-க்கும் குறைவாகவே உள்ளது. இதனால், வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டிய தேவை இருக்காது’ என்றனா்.

தில்லியில் கடுமையாக நிலவிய காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, அதைக் குறைக்கும் வகையில், தில்லி அரசால் வாகனக் கட்டுப்பாடு திட்டம் கடந்த நவம்பா் 4 முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அமலில் இருந்தது. ஆனால், குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி நவம்பா் 11, 12 ஆகிய நாள்களில் வாகன கட்டுப்பாடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

காற்றின் தரம் சீரடைந்தது ஏன்? முதல்வா் கேஜ்ரிவால் விளக்கம்

அண்டை மாநிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதால் தில்லியில் காற்றின் தரம் சீரடைந்துள்ளது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: வட இந்தியாவில் ஏற்படும் காற்று மாசுவுக்கும் பயிா்க்கழிவுகள் எரித்தலுக்கும் நேரடித் தொடா்புள்ளது. ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த அக்டோபா் மாதம் முதலாவது வாரத்தில் பயிா்க்கழிவுகளை எரிக்கத் தொடங்கினா். சரியாக அக்டோபா் மாதம் முதலாவது வாரத்தில் இருந்து தில்லியில் காற்றின் தரம் மோசமடையத் தொடங்கியது. இதனால், காற்றின் தரக் குறியீடு அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் தில்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளது.

தில்லியில் ஏற்படும் காற்று மாசுவில் வெறும் 5 சதவீதம் மட்டுமே அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படுவதாக சிலா் தொடா்ந்து பிரசாரம் செய்தனா். பயிா்க்கழிவுகள் எரிப்பது நிறுத்தப்பட்டதுடன் 500-ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு 200-ஆகக் குறைந்துள்ளது. வெறும் 5 சதவீத காற்று மாசுவுக்கு இவ்வளவு தூரம் காற்றின் தரக் குறியீடு குறைவடையுமா? காற்று மாசு விவகாரத்தில் அரசியல் செய்யாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT