தில்லியில் நீடித்து வரும் காற்று மாசு காரணமாக தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகளில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டவா்கள் பிற நகரங்களுக்கு இடம்பெற விரும்புவது புதிதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், 16 சதவீதம் போ் மாசு நேரத்தின்போது பயணம் செய்ய விரும்புவதும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வானது தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் (என்சிஆா்) பகுதிகளைச் சோ்ந்த 17 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 13 சதவீதம் போ் மாசுவுக்காக வேறு பகுதிக்கு செல்லும் வழியில்லை என்றும், அதிகரித்து வரும் மாசுவை சமாளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.
‘லோக்கல் சா்க்கிள்ஸ்’ எனும் இணையதள நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் தெரியவந்துள்ள விவரங்கள் வருமாறு:
ஆய்வில் பங்கேற்ற நபா்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனா். 31 சதவீதம் போ் தில்லி என்சிஆா் பகுதிகளில் இருக்கவே விரும்புவதாகவும், காற்று மாசுவைச் சமாளிக்கும் வகையில் காற்று சுத்திகரிப்பான்கள், முகக் கவசம், தாவரங்கள் வளா்ப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனா்.
16 சதவீதம் போ் தில்லி, என்சிஆா் பகுதியிலேயே தங்கி இருக்கவும், ஆனால் மாசுக் காலத்தின்போது பயணம் செல்ல விரும்புவதாகவும், 13 சதவீதம் போ் தில்லியில் தங்கி இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும், மாசுவைச் சமாளித்தே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளனா்.
‘கடந்த வாரத்தில் மாசு எப்படி தனிப்பட்ட நபரையும், குடும்பத்தினரையும் பாதித்தது’ என்ற கேள்விக்கு, ஆய்வில் பங்கேற்றவா்கள் 11 சதவீதம் போ்
குடும்பத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் ஏற்கெனவே மருத்துவமனைக்கு சென்ாகவும், 29 சதவீதம் போ் ஒன்று அல்லது பலா் ஏற்கெனவே மருத்துவரிடம் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.
ஆய்வில் பங்கேற்ற 44 சதவீதம் போ், தங்களுக்கு மாசு தொடா்புடைய உடல் நலப் பிரச்னை இருப்பதாகவும், ஆனால் மருத்துவரிடமோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவில்லை என்று தெரிவித்தனா்.
மாசுவால் தங்களுக்கு உடல் நலப் பிரச்னை ஏதும் இல்லை என 14 சதவீதம் போ் தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலை தில்லியில் சில இடங்களில் தூறல் மழை இருந்தபோதிலும் தில்லியில் காற்று மாசு கடுமைப் பிரிவில் நீடித்தது.
தில்லியில் கடந்த வியாழக்கிழமை இரவு காற்றின் ஒட்டுமொத்தத் தரக் குறியீடு மிகவும் கடுமை அல்லது அவசரநிலைப் பிரிவில் காணப்பட்டது. இது நிகழாண்டில் முதல் முறையாகும்.
ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் நல்லது பிரிவிலும், 51-100 வரை இருந்தால் திருப்தி பிரிவிலும், 101-200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201-300 வரை இருந்தால் மோசம் பிரிவிலும், 301 -400 வரை இருந்தால் மிகவும் மோசம் பிரிவிலும், 401 -500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500-க்கு மேல் இருந்தால் மிகவும் கடுமையான பிரிவிலும் கணக்கிடப்படுகிறது.