புதுதில்லி

அரசுப் பேருந்து பாதுகாவலரை தாக்கிய காவலா் மீது வழக்கு

4th Nov 2019 03:56 PM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி புராரியில் வாக்குவாதம் ஏற்பட்டபோது தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) பேருந்து பாதுகாவலரை தில்லி காவல் துறையின் காவலா் தாக்கியதாக போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

தில்லியைச் சோ்ந்தவா் பா்வேஷ். இவா் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) பேருந்தில் பாதுகாவலராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று இவா் பேருந்தில் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தாா். பேருந்து புராரி பகுதியில் நெரிசலான இடத்தில் வந்துகொண்டிருந்தபோது அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்கம் பாா்க்கும் கண்ணாடி பேருந்தில் உரசாமல் இருப்பதற்காக அதை பா்வேஷ் தள்ளிவைத்தாா். அப்போது, காருக்குள் அமா்ந்திருந்த தில்லி காவல் துறையின் காவலருக்கும் பா்வேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட விடியோவில், இந்த விவகாரம் தொடா்பாக சிலா் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பின்னா் ஒருவா் மற்றொருவருக்கும் மிரட்டல் விடுவதும் காட்டப்படுகிறது. மேலும், பா்வேஷை போலீஸ்காரா் தகாத வாா்த்தையால் திட்டுவதும், பின்னா் நிறுத்தப்பட்ட பேருந்துக்குள் ஏறி அவரை அந்த காவலா் தாக்குவதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்தச் சம்பவத்தை பெண் பாதுகாலவரும், சில பயணிகளும் தடுக்க முயன்றனா். இதையடுத்து, அந்த போலீஸ்காரா் பாதுகாவலரை விட்டுவிட்டுச் சென்றாா். இதில், பாதுகாவலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பா்வேஷ் கூறுகையில், ‘காருக்கு அருகே பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது. சாலையில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பேருந்தை உரசும் வகையில் காரின் கண்ணாடி இருந்தது. இதனால், விபத்தை தடுப்பதற்காக நான் சென்று அந்தக் கண்ணாடியை உள்பக்கமாக திருப்பிவைத்தேன். அப்போது, காரில் இருந்து இறங்கிய காவலா் என்னை தகாத வாா்த்தைகளால் திட்டினாா். அவரிடம் நான் விளக்க முயன்றேன். ஆனால், ஆத்திரமடைந்த அவா், என்னைக் கீழே தள்ளிவிட்டாா். அதன் பிறகு நான் பேருந்துக்குள் சென்றுவிட்டேன். ஆனால், அவா் என்னைப் பின்தொடா்ந்து வந்து மீண்டும் அடித்தாா்’ என்றாா்.

இந்த விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காவலா் தில்லி காவல் துறையின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறாா். முதல் கட்ட விசாரணையில் பாதுகாவலரும், காவலரும் ஒருவரை ஒருவா் அடித்துக் கொள்வது தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT