"வாக்குகளை வீணாக்காதீர்கள்': ஆம் ஆத்மி தலைவர்கள் மூவரிடம் விளக்கம் கோரியது தில்லி தலைமை தேர்தல் அலுவலகம்

பாஜக வேட்பாளர்களான கெளதம் கம்பீர், ரமேஷ் பிதூரி ஆகியோருக்கு வாக்களித்து தில்லி வாசிகள்

பாஜக வேட்பாளர்களான கெளதம் கம்பீர், ரமேஷ் பிதூரி ஆகியோருக்கு வாக்களித்து தில்லி வாசிகள் தங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்று கூறிய விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் மூவரிடம் தில்லி தலைமைத் தேர்தல் அலுவலகம் விளக்கம் கேட்டுள்ளது. 
கேஜரிவாலோடு, கிழக்கு தில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மர்லினா, தெற்கு தில்லி தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சத்தா ஆகியோரும் விளக்கமளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. 
கிழக்கு தில்லி தொகுதி பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீர், இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய அதிஷி மர்லினா, அதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அத்துடன், கடந்த மாதம் 26-ஆம் தேதி தனது சுட்டுரைப் பதிவில், "இரு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதால் கெளதம் கம்பீர் தகுதிநீக்கம் செய்யப்படுவார். எனவே, கிழக்கு தில்லி மக்கள் அவருக்கு வாக்களித்து தங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம்' என்று கூறியிருந்தார். 
அதேபோல், தெற்கு தில்லி பாஜக வேட்பாளரான ரமேஷ் பிதூரி, பிகார் மாநிலத்தில் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள விவரத்தை தனது வேட்புமனுத் தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடவில்லை என்று கூறி அந்தத் தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் ராகவ் சத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
அதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியிட்ட பதிவில், "ரமேஷ் பிதூரிக்கு எதிரான குற்றச்சாட்டு தீவிரமானது. அவர் நிச்சயம் தகுதிநீக்கம் செய்யப்படுவார். எனவே அவருக்கு வாக்களித்து தில்லி வாசிகள் தங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டாம்' என்று கூறியிருந்தார். 
இந்நிலையில், அரவிந்த் கேஜரிவால், அதிஷி மர்லினா, ராகவ் சத்தா ஆகியோர் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என தில்லி தலைமை தேர்தல் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. கெளதம் கம்பீர், ரமேஷ் பிதூரி ஆகியோர் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்னதாகவே எவ்வாறு கணித்தீர்கள் என்று தேர்தல் அலுவலகம் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com