தில்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிரப் பிரசாரம்

தில்லியில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

தில்லியில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். 
புது தில்லி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அஜய் மாக்கன், ஆர்.கே. புரம் அம்பேத்கர் பஸ்தி, ஆன்ட்ரூஸ் கஞ்ச், கஷ்மீரி மார்க்கெட், நியு ராஜேந்தர் நகர், மோதி நகர், கீர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அஜய் மாக்கன் பேசுகையில், "அனைவருக்கும் குடியிருப்பு என்ற வாக்குறுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் சிறு, குறு வணிகர்கள் பாதுகாப்பாக இருந்தனர். தில்லியில் உள்ள சிறு, குறு கடைகளைப் பாதுகாக்க தில்லி மாஸ்டர் பிளானில் 170 திருத்தங்கள் காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சி அமைத்த ஒரு மாதத்தில் தில்லி மாஸ்டர் பிளானில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படும். நாட்டில் பொருளாதார, வணிகசார் செயல்பாடுகளுக்கு மோடி அரசு ஊக்கம் அளிக்கவில்லை' என்றார். 
வட கிழக்கு தில்லியில் களம் காணும், தில்லி காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித், சுந்தர் நகர், கஜுரி காஸ், ஸ்ரீராம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். 
அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ் ஆட்சியின்போது மாதிரி தில்லி, மாதிரி மாநகரமாக அறியப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி ஆட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தில்லி மோசமடைந்துள்ளது.  தலைநகர் தில்லியில் மக்கள்தொகைக்கு ஏற்ப பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த தில்லி அரசு தவறிவிட்டது. சாதி, மத ரீதியான அரசியலை பாஜக முன்னெடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கட்சியையும், பாஜகவையும் நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது' என்றார் அவர். 
சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி. அகர்வால், சாஸ்திரி நகரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, சீலிங் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார். 
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அர்விந்தர் சிங் லவ்லி, ஓக்லா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விஜேந்தர் சிங், கால்காஜி, காந்தி பஸ்தி, ஸ்ரீனிவாஸ்புரி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். வட மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராஜேஷ் லிலோத்யா சாந்த்பூர், பவானா உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com