தில்லி மாநகராட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் பேசுவதற்கு பல முயற்சித்தும், அவர் நேரம் ஒதுக்கவில்லை என்று தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மேயர் சுனிதா கங்கரா குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தில்லி மாநகராட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தில்லி அரசின் திட்டமிடாத தன்மையும், மெத்தனப்போக்குமே முக்கியக் காரணமாகும். தில்லியில் உள்ள சட்ட அங்கீகாரம் இல்லாத காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், தில்லி அரசு இதுதொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தக் காலனிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தாலே தில்லி மக்கள் எதிர்கொள்ளும் 50 சதவீதம் பிரச்னைகள் முடிவுக்கு வந்துவிடும்.
பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தில்லிக்கான மத்திய அரசின் நிதிப் பங்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கேஜரிவால் கோரி வருகிறார். ஆனால், மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய நிதியை இதுவரை வழங்காமல் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். முதல்வரைச் சந்திக்க பல முறை முயற்சி செய்தோம். பல கடிதங்கள் எழுதிவிட்டோம். ஆனால், அவர் எங்களைச் சந்திக்க விரும்பவில்லை. எங்களைச் சந்திக்க நேரம் கூட ஒதுக்காத அவர், மாநகராட்சிகளுக்கு எப்படி நிதி ஒதுக்குவார் என எதிர்பார்ப்பது. தில்லியை பாரிஸ், லண்டன் போன்ற பெருநகரங்களுக்கு இணையாக மாற்றவுள்ளதாக முதல்வர் கேஜரிவால் கூறி வருகிறார். ஆனால், தில்லியின் சாலைகளைச் சுத்தம் செய்யக்கூட மாநகராட்சிகளிடம் நிதி இல்லாத போது, தலைநகர் தில்லி பாரிஸ், லண்டன் போல எப்படி மாறும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேயர் சுனிதா கங்கரா.