புதுதில்லி

பேரவைத் தேர்தல்: தில்லி காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் ஆலோசனை

29th Jun 2019 07:31 AM

ADVERTISEMENT

தில்லிக்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, "பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியினருக்கு எதிராக தில்லி காங்கிரஸ் தலைவர்கள் ஓன்றிணைந்து சந்திக்க வேண்டும்' என்று அறிவுரை வழங்கியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தில் தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித், தில்லி மேலிடப் பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அஜய் மாக்கன், மஹாபல் மிஸ்ரா, ஜே.பி. அகர்வால், ராஜேஷ் லிலோத்யா, அரவிந்தர் சிங் லவ்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக இக்கூட்டம் நடைபெற்றது. அப்போது, தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை ராகுல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அதற்கு ராகுல் காந்தி, எந்தவித சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை என்றும் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "எதிர்வரும் தில்லி சட்டப்பேரவை தேர்தல் குறித்து ராகுல் காந்தி விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது, தில்லி காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தில்லி தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததை ராகுல் காந்தி குறிப்பிட்டார். இதுபோன்ற காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சில சாதகமான சூழ்நிலைகளை அவர் மேற்கோள்காட்டினார். இதைப் பின்பற்றி கட்சியினர் உண்மையாக உழைத்தால் சிறந்த பலனை பேரவைத் தேர்தலில் எதிர்பார்க்கலாம் என ராகுல் கூறினார் என்றார் அவர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக மீண்டும் கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான கேஜரிவால் கூறினார். இதற்கு தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் ஆரம்பம் முதல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய் மாக்கன், மேலிடத் தலைவர் பி.சி. சாக்கோ ஆகியோர் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க ஆதரவு தெரிவித்தனர். தில்லி, ஹரியாணா தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னையால் இழுபறி நீடித்தது. 
நீண்ட நாள் நீடித்த இந்த பிரச்னையின் இறுதியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. இதையடுத்து, இரண்டு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்தன. இதற்கு பொறுப்பேற்று ஷீலா தீட்சித்தும், பி.சி. சாக்கோவும் பதவி விலக வேண்டும் என்று தில்லி காங்கிரஸின் மூத்த தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், தில்லி காங்கிரஸ் தலைவர்களை அழைத்து சட்டபேரவைத் தேர்தல் குறித்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி அறிவுரைகளையும் வழங்கி உள்ளார்.

 


280 வட்டார காங்கிரஸ் கமிட்டிகள் கலைப்பு
தில்லியில் உள்ள 280 வட்டார காங்கிரஸ் கமிட்டிகளை,  கட்சியின் தில்லி பிரதேச தலைவர் ஷீலா தீட்தித் கலைத்து உத்தரவிட்டுள்ளார். கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வெளியிட்ட  அறிக்கையில்,  "2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பாக 5 நபர் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு  அளித்த  அறிக்கையின்படி,  தில்லியில் உள்ள 280 வட்டார கமிட்டிகள் உடனடியாக கலைக்கப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT