தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளில் சேருவதற்கான முதல் "கட்- ஆப்' மதிப்பெண் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து கல்லூரிகளில் சேர்த்தனர்.
மாணவர் சேர்க்கைக்காக மொத்தம், 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்காக ஜூன் 22ஆம் தேதி வரை 3,67,895 விண்ணப்பங்கள் வந்தன. இதில், 2,58,388 மாணவர்கள் கட்டணங்களைச் செலுத்தி பதிவு செய்தனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 2,78,544ஆக இருந்தது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட முதல் கட்-ஆப்பில் ஹிந்து கல்லூரியில் அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) படிப்புக்காக அதிகபட்சமாக 99 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2015-இல் பிஎஸ்சி கனிணி அறிவியல் (ஹானர்ஸ்), பி.காம் (ஹானர்ஸ்), ஆகிய படிப்புகளில் சேர 100 சதவீத மதிப்பெண்கள் தேவை என முதல் கட்-ஆப்பில் நிர்ணயிக்கப்பட்டது. அதுக்கு அடுத்த ஆண்டுகளில் பிஎஸ்சி எலக்ட்ரானிக்ஸ் (ஹானர்ஸ்), பிஏ புரோகிராம், பிஏ அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) ஆகிய படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் அதிகமாக இருந்தன.
இதனிடையே, வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிகழாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் பட்டியலில் ஹிந்து கல்லூரியில் அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) படிப்புக்காக அதிகபட்சமாக 99 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
2013,14,15 ஆண்டுகளில் பிஎஸ்சி கனிணி அறிவியல் (ஹானர்ஸ்) படிப்புக்கு 100 சதவீதம் கட்- ஆப் இருந்தது. ஆச்சார்யா நரேந்திர தேவ், ஆத்ம ராம் சனதன் தர்ம், ஷியாம் பிரசாத் முகர்ஜி ஆகிய கல்லூரிகள் பிஎஸ்சி கனிணி அறிவியல் படிக்க 100 சதவீத கட்-ஆப் தேவை என 2014-இல் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு பிறகு 100 சதவீத கட்-ஆப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படவில்லை.
நிகழாண்டு கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர் சேர்க்கையின்போது, ரயில்கள் தாமதத்தால் வெளிமாநிலங்களில் இருந்து வந்த சில மாணவர்கள் தாமதமாக வந்து ஏமாற்றத்துடன் சென்றனர். மாணவர் சேர்க்கைகாக நீண்ட நேரம் ஏற்படுகிறது என்றும் இந்த முறையை மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆண்டு கட்-ஆப் படிப்பு - கல்லூரி
2015 100% பிஎஸ்சி கனிணி அறிவியல் (ஹானர்ஸ்),
பி.காம் (ஹானர்ஸ்) - இந்திர பிரஸ்தா, ஒகேஷனல் கல்லூரிகள்
2016 99.25% பி.காம் (ஹானர்ஸ்) - ராம்ஜாஸ் கல்லூரி
2017 99.66% பிஎஸ்சி எலக்ட்ரானிஸ் (ஹானர்ஸ்) - எஸ்ஜிடிபி கல்லூரி
2018 98.75% பிஏ (புரோகிராம்) - லேடி ஸ்ரீராம் கல்லூரி
2019 99% அரசியல் அறிவியல் (ஹானர்ஸ்) - ஹிந்து கல்லூரி