ஜெட் ஏர்வேஸின் பங்குகளில் 75 சதவீதம் ஏலத்தில் எடுக்கப்படும் என்று ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கூட்டமைப்பும், "அதி' எனும் நிறுவனமும் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸின் விமானியும், இந்திய விமானிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலருமான அஷ்வனி தியாகி தில்லியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கூட்டமைப்பு, அதி நிறுவனம் இணைந்து ஜெட் ஏர்வேஸின் 75 சதவீதத்தை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் விதிகளின்படி ஏலத்தில் எடுக்கவுள்ளோம். இதன்மூலம், ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்களாக மாறவுள்ளனர். இது இந்திய விமானத் துறை வரலாற்றில் முக்கியமானது. ஏனெனில், விமான நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கூட அந்நிறுவனத்தின் உரிமையாளராக மாறலாம் என்பதை நிரூபித்துள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடியின் "அனைவரையும் ஒருங்கிணைத்த அனைவருக்குமான வளர்ச்சி' கோஷத்தை நாங்கள் செயல்படுத்தவுள்ளோம். ஜெட் ஏர்வேஸை அதன் ஊழியர்களே மீட்கவுள்ளனர் என்றார் அவர்.
இது தொடர்பாக அதி நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் விஸ்வநாதன் கூறுகையில், "இந்த மாத இறுதிக்குள் ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 75 சதவீதத்தை ஏலத்தில் எடுப்போம் என நம்புகிறேன். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் ஜெட் ஏர்வேஸின் கடன் விபரங்கள் கிடைக்கப்பெறும்' என்றார் அவர்.
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களும், "அதி' நிறுவனமும் சேர்ந்து சுமார் ரூ.2,500- 5,000 கோடி வரை முதலிட செய்யவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னணி: 25 ஆண்டுகளாக விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்துவகையில் இயங்கிவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2010-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அதன்பிறகு, சில ஆண்டுகளாக இதன் வருவாய் பெருமளவில் சரிந்தது. இதனால், வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும், விமானிகளுக்கும், பிற ஊழியர்களுக்கும் ஊதியம் தருவதிலும் தாமதம் ஏற்பட்டது. மேலும், விமான எரிபொருளை வழங்கும் நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை அளிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக, இழப்பைச் சந்தித்ததால், 123 விமானங்களை இயக்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் இருந்து 5 விமானங்களை மட்டுமே இயக்கி வந்தது. இந்நிலையில், கடந்த 2018 ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி அனைத்து சேவைகளையும் நிறுத்துவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கிகளிடம் இருந்தோ, வேறு வழிகளில் இருந்தோ எங்கள் நிறுவனத்துக்கு கடனுதவி கிடைக்கவில்லை. இதனால், வேறு வழியின்றி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவையை தாற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தது. மத்திய அரசு தலையிட்டு ஜெட் ஏர்வேஸை மீட்க வேண்டும் எனக் கோரி அதன் ஊழியர்கள் தில்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.