புதுதில்லி

தில்லி அரசில் ஊழல் மலிந்து விட்டது: மனோஜ் திவாரி புகார்

31st Jul 2019 07:34 AM

ADVERTISEMENT

தில்லி அரசில் ஊழல் மலிந்து விட்டதாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.
தில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் அமைத்ததில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தில்லி பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக தில்லி லோக் ஆயுக்தாவில் தில்லி பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தில்லி விகாஷ் பவனில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் அதன் அதிகாரிகளை மனோஜ் திவாரி தலைமையிலான தில்லி பாஜகவினர் சந்தித்து அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் மனோஜ் திவாரி அளித்த பேட்டி: 
தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000 வகுப்பறைகள் கட்டப்பட்டதில் சுமார் ரூ.2, 000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு இந்த ஊழலில் நேரடித் தொடர்புள்ளது. அரசுப் பள்ளிகளில் 300 சதுர அடியுள்ள வகுப்பறை ஒன்றைக் கட்ட ரூ.24.86 லட்சத்தை தில்லி அரசு செலவு செய்துள்ளது. இதுபோன்று மொத்தம் 12,782 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு, மொத்தம் ரூ.2,892 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு சதுர அடி வகுப்பறையைக் கட்டுவதற்கு ரூ.8,800 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. 
ஆனால், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைக் கட்டும் போது கூட ஒரு சதுர அடிக்கு ரூ.5,000-க்கு மேல் செலவு ஆவதில்லை. உண்மையில், இந்த 12,782 வகுப்பறைகளையும் ரூ.800 கோடிக்குள் கட்டியிருக்கலாம். இதன்மூலம் ரூ. 2,000 கோடி ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக தில்லி லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளோம். செவ்வாய்க்கிழமை லோக் ஆயுக்தா அதிகாரிகளைச் சந்தித்து இந்த வழக்கின் நிலை தொடர்பாகக் கேட்டறிந்தோம். தில்லியில் ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதாக மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை அளித்து ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. இப்போது தில்லி அரசில் ஊழல் மலிந்து விட்டது என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT